
நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அறைகூவல் விடுப்பதாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
கார்த்திகை தீபத்திருவிழா தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவாகும். அதிலும் முருகன் திருத்தலங்களில் விசேஷமாக கொண்டாடுவதுடன் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது மரபு ஆகும்.
அதன் அடிப்படையில் முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது பாதுகாப்பு காரணம் கருதி பிரிட்டீஷ் அரசாங்கம் அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுத்துள்ளது. அதன் காரணமாக கோவிலின் முகப்பில் உள்ள இறந்தவர்களுக்காக தீபம் ஏற்றும் மோட்ச தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார்கள். தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும் கூட இந்த நடைமுறை மாறி பழைய பாரம்பரியம் காக்கப்படவில்லை.
இதனை மாற்ற வேண்டும் என்றும், தீபத் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து முன்னணி பல ஆண்டுகளாக மக்கள் போராட்டமாக நடத்தி வருகிறது.
இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த அமரர் மாவீரன் அட்வகேட் ராஜகோபாலன் பல ஆண்டுகள் தொடர்ந்து போராட்டத்திற்கு தலைமையேற்று போராடினார். மேலும் சட்டரீதியான போராட்டமும் நடத்தி மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்றார்.
ஆனால் துரதிருஷ்டமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் நீதிமன்ற உத்தரவையையும் மதிக்கவில்லை, பக்தர்களின் உணர்வுகளையும் ஏற்காமல் அலட்சியம் செய்து வருகிறது.
இந்நிலையை மாற்ற முருக பக்தர்கள் எல்லா தலங்களிலும் கார்த்திகை தீபத்தை கொண்டாடுவது போல முருகனின் முதல்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் மலைமீதான தீபத்தூணில் திருகார்த்திகை தீபத்தை ஏற்றிடுவோம் வாருங்கள் என்று இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது.
வழிபாடு நமது உரிமை. அதிலும் சட்டத்தின்படி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திருகார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
எனவே வருகின்ற திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றிட முருக பக்தர்கள் பெருந்திரளாக வருகைதர வேண்டுகிறோம்.
தீபத்தூணில் தீபம் ஏற்றி நமது பாரம்பரிய திருவிழாவை கொண்டாடுவோம். இதற்கு முருகன் அடியார்கள், ஆன்மீக குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள், காவடி குழக்கள், ஆன்மீக பெரியோர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்..





