விநாயகர் ஊர்வலத்தில் கலவரம் எதிரொலி : செங்கோட்டை, தென்காசியில் இன்று மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு

தமிழகம்

07 Sep14 Law 144 - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை தடை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் ஊர்வலம் நடத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், 30 விநாயகர் சிலையையும் அமைதியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை மேலூரில் ஆண்டுதோறும் சதுர்த்தியையொட்டி மொத்தம் 38 விநாயகர் சிலைகள் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் பிரதிஷ்டை செய்வதற்காக மேலூர் பெரிய பள்ளிவாசல் தெரு வழியாக கொண்டுசெல்ல அனுமதி பெற்றிருந்த பெண்கள் உள்ளிட்ட விழாக்குழுவினர் சுமார் ஆயிரம் பேர், நேற்று இரவு 9.30 மணி அளவில் விஸ்வநாதபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

அப்போது இந்த தெருவை சேர்ந்த மக்கள், விநாயகர் சிலையை கொண்டுசெல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பேர் திரண்டனர். இதையடுத்து விநாயகர் சிலை அந்த தெருவுக்கு வந்தபோது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சிலை மீதும், ஊர்வலத்தினர் மீதும் கல், பாட்டில் உள்ளிட்டவற்றை சிலர் வீசி தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த ஊர்வலத்தினரும், பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் குறைந்த அளவில் பாதுகாப்புக்கு சென்ற காரணத்தால் இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். கல் வீச்சில் அப்பகுதியில் இருந்த கடைகளும் சேதமடைந்தன. தொடர்ந்து இருதரப்பினரையும் சமரசப்படுத்தினர். மேலும் ஊர்வலக் குழுவினரை பாதுகாப்பாக மீட்டு அனுப்பிவைத்தனர்.

விநாயகர் சிலையும் வேனில் பலத்த பாதுகாப்புடன் அதே தெரு வழியாக வண்டிமறிச்சம்மன் கோயில் முன் கொண்டுசென்று பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்து தென்காசி டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் விரைந்து வந்த நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவி வந்தது. இந்நிலையில் செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.