முல்லைப் பெரியாறு அணையில் கேரள காவல் நிலையம் மூட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் கேரள காவல் நிலையம் மூட நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

முல்லைப்பெரியாறு அணைக்கு கூடுதல் பாதுகாப்பு தருவதாகக் கூறி அணைப்பகுதியில் புதிய காவல் நிலையத்தை  கேரள காவல்துறை இன்று திறக்கிறது. கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா இந்த காவல்நிலையத்தை திறந்து வைக்கிறார். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக கேரள அரசு கவலைப்படுவது உள்நோக்கம் கொண்டதாகும். தமிழக நலனுக்கு எதிரான கேரள அரசின் இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் கேரள அரசு புதிய காவல்நிலையத்தை திறப்பதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பராமரிப்பு பணிகளை முடக்குவது, இரண்டாவது முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக மத்திய தொழில்பாதுகாப்பு படையை நிறுத்தப்படுவதை தடுப்பது ஆகும். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டதால் கேரளத்துக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 1980&ஆம் ஆண்டுக்கு முன்பாக அணையின் நீர்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்த்தேக்கப்பகுதி பரப்பு குறைந்ததை பயன்படுத்தி அப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதிகளை கேரள அரசு அதிகளவில் கட்டிக் கொண்டது. இப்போது அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டதால் சுற்றுலா விடுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்து, நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் நீர்த்தேக்கப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளும் பயன்பாட்டை இழந்து விடும். இதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை கேரள அரசு தொடர்ந்து தடுத்து வருகிறது.

2014ஆம் ஆண்டு மே மாதம் முல்லைப்பெரியாறு அணையின் கேலரி பகுதியில் ஓடுகள் ஒட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமானப் பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்டு செல்ல முயன்ற போது, அவர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டன. அதன்பின் முல்லைப்பெரியாறு அணைக்கு தேக்கடியிலிருந்து படகு மூலம் எளிதில் சென்று விடலாம். ஆனால், இதை தடுப்பதற்காகவேகடந்த 2014ஆம் ஆண்டு திசம்பர் முதல், கேரள வனத்துறை வீணான தடைகளை விதிக்கிறது. இதனால் தமிழக அதிகாரிகள் படகு பயணத்தைத் தவிர்த்து வல்லக்கடவு வழியாக அணைக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் பல கிலோ மீட்டர் கூடுதலாக பயணிக்க வேண்டியிருக்கிறது.  பல நேரங்களில் தமிழக அதிகாரிகளை கேரள காவலர்கள் மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்த நிகழ்வுகளும் உண்டு.

அதே உத்தியை பயன்படுத்தி பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை முடக்குவதற்கான சதி திட்டத்தின் ஓர் அங்கமாகவே கேரள அரசு இப்போது புதிய காவல் நிலையத்தை திறக்கிறது. அந்த காவல்நிலையத்திற்கு ஒரு துணை கண்காணிப்பாளர், 3 ஆய்வாளர்கள், 4 சார்பு ஆய்வாளர்கள் உட்பட 185 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உண்மையாகவே பரந்து விரிந்து கிடக்கும் அணைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் இதை விட அதிக காவலர்கள் தேவை. ஆனால், கேரள அரசின் நோக்கம் அணையை பாதுகாப்பது அல்ல; மாறாக தமிழக அதிகாரிகளை அச்சுறுத்த வேண்டும் என்பது தான். அணை பராமரிப்பு பணியில் தமிழக அதிகாரிகள் 8 பேர் மட்டும் தான் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களை எளிதாக மிரட்டி பணிகளை தடுத்து விடலாம் என்பது கேரளத்தின் திட்டம். இதற்காகவே, ஓர் ஆய்வாளர், 2 சார்பு ஆய்வாளர்கள் உள்பட 20 காவலர்கள் என்ற புதிய காவல்நிலையத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையை 185 ஆக கேரள அரசு உயர்த்தியிருக்கிறது.

மற்றொரு புறம், முல்லைப்பெரியாறு அணைக்கு மத்தியப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் வலுவாக இருந்ததால், அதை முறியடிக்கும் வகையில் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அங்கு தனிக் காவல் நிலையத்தை அமைக்கப்போவதாக கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அறிவித்த கேரள அரசு அதே தகவலை ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், மத்தியப் படைகளின் பாதுகாப்பு வழங்கப்படுவதை தடுப்பதற்காக புதிய காவல்நிலையத்தை கேரள அரசு திறக்கிறது. இந்த விஷயத்தில் உண்மை நிலவரத்தை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய காவல்நிலையத்தை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் கேரள அரசின் இந்நடவடிக்கையை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. உடனடியாக இதில் தலையிட்டு புதிய காவல்நிலையத்தை முடக்குவதுடன், மத்திய படைகளை காவலுக்கு நிறுத்தவேண்டும்.