டிப்தீரியா இது தொண்டை அடைப்பான் நோய்தான். போலியோவைப் போல இந்த டிப்தீரியா’ எனப்படும் நோயும் தமிழகத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக தமிழக சுகாதாரத்துறை நினைத்திருந்த வேளையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் இந்த நோய் வேகமாகப் பரவிவருவது பயத்தைக் கிளப்பியிருக்கிறது.
இந்நோயானது 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத்தான் பெரும்பாலும் தாக்கும் என்பதுதான் கொடுமையான விஷயம். தொண்டையில் சவ்வு போன்று உருவாகி, மூச்சு விட முடியாமலும், உணவு உண்ண முடியாமலும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காவிட்டால் கொஞ்சம் சிரமம் தானாம்.கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி ஈரோடு மாவட்டம், கேர்மாளம் ஊராட்சி உருளிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த 10 வயதான மாதப்பன் என்னும் பழங்குடியின சிறுவனுக்குத் தொண்டையில் வலி ஏற்பட, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்திருக்கின்றனர். அங்கு சிறுவனுக்கு `டிப்தீரியா’ அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட சிறுவன் மாதப்பன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறான்.
அப்போதே, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம், தொண்டை அடைப்பான் நோயைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென’ மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தைப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அதற்குள்ளாக, ஈரோடு மாவட்டம், மல்லியம்மன் துர்க்கம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த காசி பிரசாத் என்னும் 10 வயதான சிறுவனுக்கு டிப்தீரியா' நோய் தாக்கி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருக்கின்றனர். எந்த சிகிச்சையாலும் காசி பிரசாத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
டிப்தீரியா; நோய்க்கு ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது ஆளாக பலியாகிப் போனான். தொண்டை வலியென சிகிச்சைக்குச் சென்றவனை, பாதையில்லாத அவனது சொந்த கிராமத்துக்கு வனத்தின் வழியே தொட்டில் கட்டி சடலமாகத்தான் தூக்கிச் சென்றனர்.
ஐஸ் சாப்பிட்டதால தொண்டையில சளி கட்டியிருக்கும்னு நினைச்சோம்’ என அவனுடைய உறவினர்கள் வெள்ளந்தியாகச் சொல்லவும், அவர்களின் விழிப்புணர்வற்ற நிலை நம்மைக் கலங்கடித்தது. இதற்கிடையே சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 16 குழந்தைகளுக்கு `டிப்தீரியா’ நோயின் அறிகுறி தென்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாளிடம் பேசினோம். `மாதப்பன் என்னும் சிறுவன் இறந்தபோதே அவர்களுடைய கிராமத்தைச் சுற்றி 5 கி.மீ பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளைப் போட்டோம்.
காசி பிரசாத் உயிரிழந்ததையடுத்து அவர் வசித்த மல்லியம்மன் துர்க்கத்தில் ஒரு மருத்துவக் குழு தங்கியிருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு கண்காணித்து வருகின்றனர். மேலும், சத்தியமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்காக 21 மருத்துவக் குழுக்களை அனுப்பி குழந்தைகளுக்கு தீவிரமாக தடுப்பூசிகளைப் போட்டு வருகிறோம். இந்த நோய் மேலும் பரவாமலிருக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.
எய்ம்ஸ், மல்ட்டி ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி என நகர்ப்பகுதிகளில் பல்வேறு மருத்துவ வசதிகளைக் கொடுக்கும் அரசாங்கம், சமூகத்தின் கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு சாதாரண மருத்துவ வசதிகள் கிடைப்பதையாவது உறுதி செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.