
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஸ்மார்ட்போன்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை வழங்குவது குறித்து மத்திய அரசு சார்பில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட இருக்கிறது.
சைபர்செக்யூர்ட்டி தரம் சார்ந்த புதிய விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியிடப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாப்பது சார்ந்த அம்சங்களை அமல்படுத்தும் நோக்கில் தரம் உயர்த்தப்படும். இத்துடன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதை கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு மொபைல் சாதனங்களில் அதிகப்படியாக இருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அரசு அறிவிப்புகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஹேக்கிங் தகவல் திருட்டு போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்பாக இருக்கிறது. சீனா மற்றும் இந்திய எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியர்களின் தகவல்கள் திருடப்படாமல் இருப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பேங்கிங் சார்ந்த தகவல்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்கள் அவர்களது மருத்துவ குறிப்புகள் மற்றும் இணைய பயன்பாடு சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அச்சம் தெரிவித்துள்ளது. முன்னதாக மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றி வரும் பாதுகாப்பு வழிமுறைகளை சமர்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ரிசர்வ் வங்கி மற்றும் தொலைதொடர்பு துறை ஆகியவற்றின் பரிந்துரையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் சைபர் செக்யூரிட்டியை மேம்படுத்த விவோ, சியோமி, ஒன் பிளஸ் போன்ற சைனா மொபைல் கம்பெனி உட்பட 30 மொபைல் கம்பெனிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.



