
நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் 75 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அகில இந்திய வானொலி, சென்னை நிலையத்தின் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. அவற்றில், பிளாசி முதல் செங்கோட்டை வரை என்ற தொடர் குறிப்பிடத்தக்க ஒன்று.
வணிகர்களாக வந்த ஆங்கிலேயர்கள் முதல் முதலாக நம் நாட்டின் நிலங்களை வசப்படுத்தி, அரசியல் ரீதியாக ஆட்சி செய்வதற்குக் காரணமாக அமைந்த முதல் போராகக் கருதப்படும் 1757இல் நடைபெற்ற பிளாசிப் போர் முதல், நாடு விடுதலை பெறக் காரணமாக அமைந்த 1947ஆம் வருடத்திய நிகழ்வுகள் வரை என 190 ஆண்டு கால சரித்திரத்தின் பின்னணியைக் கூறும் நிகழ்ச்சி இது. பாரதத்தாய் தன்னிடம் அமர்ந்து கதை கேட்கும் ஒரு சிறுவனுக்கு தனது கதையைச் சொல்வது பாணியிலான உரைச்சித்திரமாக இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி, ஒரு வருடத்துக்கு தினமும் 5 நிமிடங்களுக்கு இந்த உரை நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. சென்னை ஏ சென்னை பி, எஃப்எம் ரெயின்போ, எப்எம் கோல்ட் ஆகிய அலைவரிசைகளில் முறையே காலை 7.30, 7.50, 8.50, 9.15 ஆகிய நேரங்களில் இந்த உரைச்சித்திரம் ஒலிபரப்பாகிறது. சென்னை வானொலி நிலையத் தயாரிப்பான இதனை தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களும் பெற்று அஞ்சல் செய்கின்றன.
இந்த நிகழ்ச்சி பிரசார் பாரதியின் இணையதளம் வாயிலாகவும் ஒலிபரப்பாவதால், மேலும் அதிக நேயர்களைச் சென்றடைகிறது குறிப்பிடத் தக்கது.
ஆன்லைனில் அகில இந்திய வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்க விரும்புவோர்… கீழ்க்காணும் சுட்டியில் க்ளிக் செய்து… எந்த சேனலைக் கேட்க விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து கேட்கலாம்…