இந்தியாவின் மிகப் பெரும் நியூசன்ஸ் என்று பேர் எடுத்திருக்கிறது வாட்ஸ்அப். அதனால் ஏற்படும் பயன்களைக் காட்டிலும், சமூகத்தை சீரழிக்கும் அல்லது பதற்றத்துக்கு உள்ளாக்கும் செயல்பாடுகள்தான் அதிகம்!
காரணம், பார்வர்ட் செய்திகள். கண்ணால் கண்ட அனைத்தையும் அடுத்தவர்க்கு பார்வர்ட் செய்து, பொய்களைப் பரப்புவதில், வாட்ஸ்அப் முன்னோடியாகத் திகழ்கிறது. இது மத்திய அரசுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயம்!
இதனால் ஒரு முடிவு எடுத்த மத்திய அரசு, ஒரு செய்தி எங்கிருந்து முதலில் அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறிய நவீன தொழில்நுட்பத்தைக் காணுமாறு கூறியது. ஆனால், இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்துள்ளது.
வாட்ஸ் அப்பில் பொய்ச் செய்திகள், வதந்திகள் பெருமளவில் பரவி, குழந்தை கடத்துபவர்கள், பசுவதை செய்பவர்கள் என்பது தொடர்பாக மக்களின் படங்களைப் பரப்பி விட்டு, அவர்களை கும்பல் படுகொலை செய்வது வரை விஷமம் பரவிக் கிடக்கிறது. இதைத் தடுக்க வதந்தி மற்றும் பொய்ச் செய்திகளை முதலில் அனுப்பியவர் யார் எனக் கண்டுபிடிப்பதற்கு, ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டறியுமாறு வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் இந்திய அரசு கேட்டுக் கொண்டது.
ஆனால், இந்தக் கோரிக்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் நிராகரித்துவிட்டது. செய்தியை முதலில் அனுப்பியவர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது, பயனாளர்களின் தனியுரிமைப் பாதுகாப்பை பாதிக்கும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.
இதனிடையே, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட ஆப்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்த போதும், குறுஞ்செய்திகளை ஒட்டு மொத்தமாக தடை செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று தொலைத் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
பெருவாரியான சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வரப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில், அவ்வாறு குறுஞ்செய்திகளுக்கான ஆப்-களை ஒட்டுமொத்தமாக தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தொலைத்தொடர்பு செயலர் அருணா சுந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதி கூறியுள்ளார்.




