கூகுள் நிறுவனத்தின் சார்பு இணைய தளமான யூ டியூப் இணையதள சேவை, இன்று காலை உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. திரைப் படங்கள், பாடல்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வீடியோ பதிவுகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இணையதள சேவை திடீரென முடங்கியதால், பல கோடி பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
யுடியூப் இணைய தள பக்கத்தில் சர்வர் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டு உள்ளதாகவும் உயர் தொழில்நுட்பக் குழுவினர் அதனை சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும் யுடியூப் மூலம் தெரிவிக்கப் பட்டது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது பிரபல வீடியோ சேவைகளுக்கான யூ டியூப் இணைய தளம்! உலக அளவில் வீடியோ பதிவுகளை பகிர யுடியூபையே பெரும்பாலானோரும் பயன்படுத்துகின்றனர். யுடியூப் தளத்தை சான் மாடியோ என்பவர் 2005ல் உருவாக்கினார். அடுத்த ஆண்டே இதன் முக்கியத்துவம் கருதி, கூகுள் நிறுவனம் யுடியூபை கையகப்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை உலக அளவில் யூடியூப் இணைய தளம் சர்வர் கோளாறால் முடங்கியது என்றும் பழுதை சரி செய்யும் பணியில் உயர்நுட்ப வல்லுனர் குழு ஈடுபட்டனர் என்றும் கூறப்பட்டது. தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், யுடியூப் இணைய தளம் மீண்டும் செயல்படத் துவங்கியது.




