தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இப்போது பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயின் காரணமாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் பொது மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இதனால் சமூக தனிநபர் இடைவெளி விட்டு, குளிப்பதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சிறிது நேரக் குளியலில் சுற்றுலா பயணிகள் வெளிவருகின்றனர்….
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 9 மாத காலத்திற்கு பின்பு சுற்றுலா பயணிகள் இன்று முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குளிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து வருகின்றனர்.
தென் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகுடன் கூடிய திருக்குற்றாலம் மிகச் சிறந்த ஆன்மிக சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. சிவபெருமானின் பஞ்ச நர்த்தன சபைகளில் சித்திர சபை இங்கே உள்ளது! 51 சக்தி பீடங்களில் புகழ்பெற்ற தரணி பீடம் உள்ள திருக்குற்றாலநாதர் திருக்கோயிலை ஒட்டிய மெயின் அருவி, புனித தீர்த்தக் கட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எனவே இங்கே குளிப்பது, உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், உடல் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் ஆன்ம நலன் அதிகரிக்கும் திருமந்திரமாகவும் திகழ்கிறது. மிகப் பழங்காலம் முதலே குறுமுனி அகத்தியரால் வடிக்கப்பட்ட குற்றாலநாதரையும் தரிசித்து அருள் பெறுகின்றனர் பக்தர்கள்!
இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என பல்வேறு அருவிகளில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களான சீசன் காலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அப்போது தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்கூட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து நீராடிச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி, குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப் பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை மெயினருவியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது .
மேலும் அருவியில் குளிக்க வருபவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளின் படி அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சமூக இடைவெளியுடன் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் அருவிக்கு நீராட வருபவர்களின் பெயர் விவரங்களும் பதிவு செய்யப்படுகிறது.