
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றாலம், ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை இந்த மாதத் தொடக்கத்திலேயே பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், மழை பெய்யாமல் ஏமாற்றியது. பின்னர் ஒருவாரம் கழித்து மீண்டும் தேதி மாற்றி அறிவிக்கப் பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக குற்றால மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் பேரருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட ஆறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை சென்னை, போரூர், மாங்காடு பகுதியில் நல்ல மழை பெய்தது.
முன்னதாக, தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வரும் நாட்களில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.