தொடர் விடுமுறையை கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவை ஈரோடு பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
தமிழ்புத்தாண்டு, ஈஸ்டர் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கடந்த 2 நாட்களாக கோவையில் காலையில் வெயில் சுட்டெரித்து வந்தது. மேலும் வளிமண்டல மேலடுக்கு காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில் தொடர்விடுமுறை காரணமாக கோவை மாவட்டம் கோவை குற்றாலம், பரளிக்காடு, காரமடை வனச்சரகம் பூச்சமரத்தூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் சுற்றுச்சூழல் மையங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கோவை குற்றால நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக லேசான மழையுடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.






