December 6, 2025, 1:49 AM
26 C
Chennai

ஹரித்வாரின் ஆன்மா; கங்கா புஷ்கர விழாவில்!

jb haridhwar 2 - 2025
#image_title

-டாக்டர் ஜெ.பாஸ்கரன்


— டாக்டர் ஜெ.பாஸ்கரனின் ஹரித்வார் பயணத்தில்… தொடரின் இரண்டாவது கட்டுரை…
முதல் கட்டுரை சுட்டி:
ஹரித்வாரில் மஹா கங்கா புஷ்கர விழா! : டாக்டர் ஜெ.பாஸ்கரன்


சக்ஸெனா ரெடியாக இருந்தார். மாலை கங்கா ஆர்த்தி பார்க்கக் கிளம்பினோம். சாலையோரச் சின்னக் கடையில் டீ குடிக்கலாம் என சொன்னபோது, சிரித்துத் தலையாட்டியவர், பத்து நிமிடத்திற்குப் பிறகு ஒரு தகர ஷெட், சிமெண்ட் தரை போட்ட கடையில் நிறுத்தினார். மதிய உணவு முடிந்து, இன்னும் மாலை தொடங்கவில்லை அந்தக் கடைக்காரருக்கு – மெதுவாக டீ தூள், இஞ்சி, மசாலாத் தூள், கவர்ப் பால் எல்லாம் எடுத்துவந்தார். ஸ்டவ் பற்ற வைத்து, மெ..து..வாக டீ தயாரித்தார். பிரவுன் கலரில் கொதித்து பொங்கிய டீயைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தோம். அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்தார் சக்ஸெனா! ஒரு வழியாக சூடான டீ கிடைக்க (இங்குக் கண்ணாடித் தம்ளரில்தான் டீ!), கவனமாகக் குடித்தோம்.

பிரதான சாலையின் இடது புறம் உடன் வந்து கொண்டிருந்த கங்கை, ஓரிடத்தில் திரும்பி வலது புறம் சென்றாள் – ‘ஹர் கி பவுரி’ என்ற பெயர் கொண்ட இடம் – தூரத்தில் அழகான மலைத் தொடர், கங்கையின் இருபுறமும் கரைகள், பாலங்கள், ஏராளமான சன்னதிகள், மணிக்கூண்டு, குளிப்பதற்கேற்ப படித்துறைகள், ஏராளமான மக்கள் என எப்போதும் திருவிழாக்கோலம்தான்! விஷ்ணு அங்குப் பாறையொன்றில் அமர்ந்திருக்க, அவரைச் சந்திக்க கங்கை திரும்பி வந்ததாக ஒரு புராணக் கதை – சொன்னவர் சக்ஸெனா! இன்றும் அங்கு பாறை ஒன்றில் பெரிய பாதச் சுவடு உள்ளது! மலையிலிருந்து முதலில் தரையைத் தொட்டு ஓடிவரும் கங்கை ஆர்பரித்து வருவது கண்கொள்ளாக் காட்சி!

சிவாலிக் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஹரித்வார். இந்துக்களின் புனிதத் தலங்களில் ஒன்று. காசியை விட இங்கு கங்கைக்கு முக்கியத்துவம் அதிகம். 12 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ‘கும்பமேளா’ மிகவும் விசேஷமானது. பாற்கடலைக் கடைந்த போது அமுதத் துளிகள் விழுந்த நான்கு இடங்களில் இதுவும் ஒன்று (உஜ்ஜயினி, நாசிக், பிரயாகை மற்ற மூன்று இடங்கள்). ‘பிரம்ம குண்டம்’ எனப்படும் இந்த இடத்திற்கு ஹர் கி பவுரி (இறைவனின் அடிச்சுவடுகள்) என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஹரித்வாரின் மிகப் புனிதமான படித்துறை (‘காட்’) இது. இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் இருக்கும் சிவன் கோயில்களுக்கு கங்கை நீரை எடுத்துச் சென்று அபிஷேகம் செய்வது புண்ணியமாகக் கருதப்படுகின்றது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற புனித ஸ்தலங்களுக்குச் செல்ல, ஹரித்வார் நுழைவாயிலாக அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஹரித்வார். அக்பர் எங்கிருந்தாலும், அவர் குடிப்பதற்கு, இங்கிருந்து கங்கை நீர் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒரு குறிப்பு இருக்கிறது. இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்று ஹரித்வார் என்கிறது அபுல் ஃபசல் எழுதிய ‘அயினி அக்பரி’ என்ற நூல்.

கங்கா ஆர்த்தி நடைபெறும் இடத்திற்கு காரில் செல்ல முடியாது. சுமார் இரண்டு கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். வித்தியாசமான சைக்கிள் ரிக்‌ஷா கிடைக்கிறது. தலைக்கு 15 – 20 ரூபாய். ஒரு ரிக்‌ஷாவில் மூன்று பேர் பயணிக்கலாம். மூன்றாவது பிரயாணி, பின்னால் குறுக்காகப் போடப்பட்டுள்ள பலகையில் ரிக்‌ஷா செல்லும் திசைக்கு எதிர்த் திசையைப் பார்த்தபடி அமரவேண்டும். பிடித்துக்கொள்ள ஒரு கம்பி உண்டு. தலை, கழுத்து, முதுகு எல்லாவற்றையும் வளைத்து, கம்பிக்குள் நுழைந்து, அந்தப் பலகையில் எதிர்த் திசை நோக்கி அமரவேண்டும் – தேர்ந்த ஜிம்னாஸ்டிஷியனின் லாவகம் தேவைப்படுகின்ற ஒரு செயல் அது! அமர்ந்து விட்டால், வேடிக்கை பார்க்க அதைவிடச் சிறந்த சீட் கிடையாது! இரண்டு பக்கமும் நம்ம ஊர்த் திருவிழாக் கடைகள் போல வரிசையாக எல்லாம் கிடைக்கின்றன! பிளாஸ்டிக் சாமான்கள் (ஜலத்தில் கண்டம் இருப்பவர்கள், படியில் அமர்ந்து, மொண்டு குளிக்க ‘மக்’ கிடைக்கிறது!), மசாலா தூவிய கிரீன் சாலாட், தாமிரத்தில் பூஜை சாமான்கள், சொம்புகள், கோன் ஐஸ், குல்ஃபி, ‘மொபைல்’ ஹாங்கரில் தொங்கும் ரெடிமேட் ஆடைகள் என எல்லாம் கங்கைக் கரையில் கிடைக்கின்றன! பல வித காவி வண்ணத்தில் உடை, தாடி, மீசை, ருத்ராட்சம், தோளில் பையுடன் எங்கும் சன்யாசிகள்.

அப்போது உருகிய ஐஸ்கட்டி போல கங்கை நீர் ‘சில்’லென்றிருந்தது. வைத்த கால் மரத்துப்போகும் அளவிற்கு சில்லிப்பு! ஸ்டீல் கம்பிகள், சங்கிலிகள் எல்லாம் பாதுகாப்பாக பிடித்துக்கொண்டு குளிக்க வசதி செய்திருக்கிறார்கள் – புராண கால முனிவர்கள் இப்போது வந்தால், கங்கையில் நீராடவும், கரையில் தியானம் செய்யவும் தயங்குவார்கள்! உல்லாசத் தலமாக மாறிவிட்ட போதிலும், கங்கையின் மீது பக்தியும், மரியாதையும், நம்பிக்கையும் அங்கு விரவியுள்ளதை உணரமுடிகின்றது. இலையில் செய்யப்பட்ட சிறிய தட்டுகளில் மலர்களுடன், கங்கையில் அழகாக ஆடியபடி செல்லும் தீபங்கள் மனதை அமைதிப்படுத்துபவை.

கங்கைக்கு அக்கரையில் ஆர்த்தி. இரண்டு புறமும் ஜனத்திரள் – நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சுமாராகத் தெரிந்தது. நான்கைந்து விளக்குப் புள்ளிகள் கங்கைக்கு ஆரத்தியாகச் சுற்றுவது தெரிந்தது. அங்கிருந்த சிப்பந்திகள், நன்கொடை வசூலித்து, ‘ரசீது’ம் கொடுத்தது வியப்பு! ஆர்த்தி முடிந்து, கூட்டத்தில் மிதந்து வெளியே வந்து, மீண்டும் மண் தம்ளரில் டீ குடித்தோம். நடந்தே வந்து காரைக் கண்டுபிடித்து, திரும்பினோம். பஞ்சாபி தாபாவில் இரவு உணவு உண்டோம். முதலாளி போலிருந்த பெண் அழகாயிருந்தாள் – நாங்கள் சாப்பிட்டு முடித்தபின், அருகில் வந்து…. டேபிளைச் சுத்தம் செய்தாள்! தி.மோ. வில் நாகேஷ் வடிவு வீட்டில் சொல்லும் வசனம் நினைவுக்கு வந்தது!

கெஸ்ட் ஹவுஸ் வந்து, நாளை கங்கை புஷ்கரம் செல்ல வேண்டும் என நினைத்தபடி உறங்கிப் போனோம்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories