
என் பயணங்கள் – பகுதி 2
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நான் ஒரு இந்து; ஸநாதன தர்மத்தைக் கடைபிடிப்பவன். எனவே என்னுடைய பயணங்களில் திருக்கோவில்கள் பல இடம்பெறுகின்றன. நான் அறிவியல் படித்தவன்; எனவே அறிவியல் தொடர்பான பயணங்கள் பல செய்திருக்கிறேன். தமிழிலும் வரலாற்றிலும் முதுகலைப் பட்டம் பெற்றவன் எனவே வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் செல்லும் ஆர்வமுடையவன். எடுத்துக்காட்டாக ஹாதிகும்பா கல்வெட்டைப் பார்ப்பதற்காக நான் புவனேஷ்வரம் சென்றேன்.
நம் நாட்டிலேயே பார்ப்பதற்கு பல இடங்கள் இருப்பதால் நான் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிச் சிந்திக்கவில்லை. நான் மட்டும் தனியாகச் சென்று இடங்களைப் பார்ப்பதில் நான் விருப்பமில்லாதவன். எங்கு சென்றாலும் என் மனைவி, மகள், மகனோடு செல்வதுதான் வழக்கம். தமிழகத்திற்குள் சுற்றுலா செல்லும்போது எப்போதும் ஒரு மகிழுந்தில் (கார்) செல்வதுதான் வழக்கம். வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்னர் என்னென்ன செலவுகள் செய்யப்போகிறோம் என்பதை குடும்பத்துடன் விவாதித்துவிடுவேன். வெளியூர் செல்லும்போது அங்கே எதையும் வாங்கும் வழக்கம் கிடையாது.
காரில் செல்லும்போது எங்கே சாப்பிடவேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்துவிடுவோம். காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பதரை மணி வரை மட்டுமே பயணம். இடையிடையயே வாகன ஓட்டுநருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் நிறுத்தங்கள் இருக்கும். வாகன ஓட்டுநரும் நாங்கள் சாப்பிடும் இடங்களில் எங்களுக்கு அருகில் அமர்ந்து அவருக்கு வேண்டியதைச் சாப்பிடுவார்.
இரவில் நாங்கள் தங்கும் இடத்தில் வாகன ஓட்டுநருக்கும் நன்கு உறங்க இடம் அளிக்கப்படும். ஹோட்டலில் ரூம் புக் செய்தால் வாகன ஓட்டுநருக்கும் தனி அறை புக் செய்து தரப்படும். எனவே கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் சுற்றுலா செல்லும்போது ஒரே வாகன ஓட்டுநர் எனக்கு வாடகைக்கு கார் ஓட்டுகிறார்.
எந்த ஊருக்குப் போக விரும்புகிறேனோ அந்த ஊரின் வரைபடம் என்னிடத்தில் இருக்கும்; முதலிலேயே வாங்கி வைத்துவிடுவேன். இப்போது பிரச்சனை இல்லை. கூகிளில் நல்ல வழித்துணைப் படங்கள் கிடைக்கின்றன. கையில் நிறைய தின்பண்டங்கள், குடிப்பதற்குக் குடிநீர், பழங்கள் வாங்கி வைத்துக்கொள்வோம்.
நான் ஆண்டிற்கு ஒரு முறை சென்னையிலிருந்து என்னுடைய சொந்த ஊரான குத்தாலம் செல்வேன். குத்தாலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. காலை பதினோரு மணிக்கு குத்தாலம் அருகில், திருமணஞ்சேரி செல்லும் வழியில் உள்ள கண்டியூர் என்னும் இடத்தில் உள்ள வடிவம்மன் கோயிலுக்குச் செல்வோம். அது எங்கள் குலதெய்வக் கோயில். சுமார் ஒரு மணிக்கு அங்கிருந்து கிளம்புவோம். சென்னைக்குத் திரும்பும் வழியில் வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி ப்ரும்மபுரீஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில், திருவதிகை வீரட்டேஸ்வரர் கோயில் இவற்றுள் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் செல்லலாம்.
சில சமயங்களில் காலை நேரத்தில் சென்னையிலிருந்து செல்லும்போது பாண்டிச்சேரி அருகே உள்ள பஞ்சவடி விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்குச் செல்வது வழக்கம். பொதுவாக கண்டியூர் கோயிலில் ஜூன் மாதத்தில் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அபிஷேக ஆராதனைகள் நடத்துவோம். அவ்வாறு நடத்தும்போது, சில சமயங்களில் சனிக்கிழமையும் விடுமுறை வந்தால். சனிக்கிழமை காலையிலேயே சென்னையிலிருந்து கிளம்புவோம்.
அப்படியொரு பயணத்தைப் பற்றி அடுத்த பகுதியில் காணலாம்.