
தமிழக அரசுக்கு எதிராக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ செய்தி:
தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் இந்து ஆதரவாளர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சனாதனம் குறித்து இந்துக்கள் மனம் புண்படும்படி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் , இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் இந்து ஆதரவாளர்கள் மீது மட்டும் காவல்துறை பழிவாங்கும் நோக்கத்துடன் கைது நடவடிக்கை மேற்கொள்கிறது, என்று குற்றம் சாட்டி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிய நிலையில், அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.