spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுற்றுலாநம்ம ஊரு சுற்றுலா: மயிலம் முருகன் கோயில்!

நம்ம ஊரு சுற்றுலா: மயிலம் முருகன் கோயில்!

- Advertisement -
mailam murugan temple

பகுதி 6 – மயிலம்

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

          திருப்போரூரிலிருந்து தண்டலம் வழியாக செங்கல்பட்டு வந்தடைந்து தேசிய நெடுஞ்சாலை 32 வழியாக மாமண்டூர் பாலாற்றுப் பாலத்தை அடைய வேண்டும்.  அங்கிருந்து மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிரப்பாக்கம் வழியாகச் செல்லும்போது இடதுபுறம் 99 கிலோமீடர் காஃபி ஷாப் ஒன்று வரும். அங்கு காரை நிறுத்தி ஒரு பத்து நிமிடம் இளைப்பாறலாம். நல்ல கழிப்பறை வசதிகளுடன் கூடிய (தற்போது) இரண்டு உணவகங்கள் உள்ளன. வாழைப்பூ வடை, சிறுதானிய தோசை என விதவிதமாக பாரம்பரிய உணவுகள் இங்கே கிடைக்கும். நாங்கள் பெரும்பாலும் காஃபி, வடை மட்டுமே சாப்பிடுவோம். இந்த இடத்திற்கு வருகையில் சுமார் 1030 மணி ஆகும். இங்கிருந்து புறப்படுகையில் 1100 மணி ஆகிவிடும்.

          இங்கிருந்து  சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் மயிலம் முருகன் கோயில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 32இலிருந்து 132க்கு மாறி, கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் இடதுபுறம் சுமார் 15 கிலோமீட்டர் பயணித்தால் மயிலம் குன்றை நாம் காணலாம்.  இந்தச் சிறிய குன்றின் மீது பெரிய இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கும் மயிலம் முருகன் கோயில், பசுமையான மரங்கள் சூழ்ந்த மயில் தோகை விரித்தது போன்ற அழகான அமைப்பைக் கொண்டது. இக்குன்றின் உச்சியில் மயிலின் கொண்டை போல திருக்கோயில் அமைந்திருக்கிறது. மயில் போன்று காட்சியளிப்பதால் இக்குன்றுக்கு மயிலம் என்கிற பெயர் பெற்றுள்ளது.

          முருகப்பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மயில் வடிவான மலையாக மாறி இங்கு கடும்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சுப்ரமணியர் காட்சியளித்தபோது, தன்னையே வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டினார் சூரபத்மன். மயில் வடிவாக அவர் தவம் புரிந்த அத்தலத்திற்கும் ‘மயூராசலம்’ என்கிற பெயரை வேண்டினார். முருகப்பெருமானும் அவரது தவத்தை ஏற்றுக் கொண்டார். ’பாலசித்தர்’ என்பவரால் சூரபத்மனின் கோரிக்கைகள் பிற்காலத்தில் நிறைவேறியது.  மயூராசலம் என்கிற பெயரே பின்னாளில் மயிலமாக மருவியது.

          இது பால சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம். பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.

          இது பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும் பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு. தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.

          இத்திருக்கோயில் காலை 0600 மணி முதல் மதியம் 1230 மணி வரையும் பின்னர் மாலை 1600 மணி முதல் இரவு 2000 மணி வரயும், ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் முழுநேரமும் திறந்திருக்கும். காரில் வருபவர்கள் மலை மீது திருக்கோயில் வாசல் வரை காரில் செல்ல முடியும். பின்னர் சுமார் 30 படிகள் ஏறி முருகப் பெருமானைத் தரிசிக்க முடியும். நாங்கள் கோயிலுக்கு வருகையில் மணி 12ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. அவசர அவசரமாக முருகப் பெருமானைத் தரிசித்துவிட்டு நாங்கள் வெளியில் வந்தோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe