
தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் மேற்கொண்டிருக்கும் என் மண் என் மக்கள் பாத யாத்திரை வரும் அக்.16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அண்ணாமலை அக்.04 இன்று, தனது மூன்றாம் கட்ட பாத யாத்திரையைத் தொடங்குவதாக இருந்தார். ஆனால் அவரது தில்லி பயணம் மேலும் ஒரு நாள் நீடித்ததால், சென்னையில் நடைபெறுவதாக இருந்த பாஜக.,வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்.05ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், அக்.06 அன்று அண்ணாமலையின் மூன்றாம் கட்டப் பாத யாத்திரை தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
ஆனால், திடீரென அண்ணாமலைக்கு மூச்சுக் குழாய் தொற்று ஏற்பட்டு, இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இதனால், அவர் குறைந்தது இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனால், அக்.06ம் தேதி மேற்கொள்ளப்படவிருந்த அண்ணாமலையின் பாத யாத்திரை, மேலும் 10 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, வரும் 16ம் தேதி தொடங்கும் என்று பாஜக., அறிவித்துள்ளது.
கடந்த இரு கட்டங்களாக நடந்த அண்ணாமலையின் என் மண் என் மக்கள் – பாத யாத்திரை பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு கட்ட பாத யாத்திரை முடிந்த பின்னும், தனது யாத்திரை குறித்த தகவல்களுடன், தில்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்து வருகிறார் அண்ணாமலை. அவரது முதல் கட்ட பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் தொடங்கி வைத்தவர் அமித் ஷா என்பதால், அவரது பாத யாத்திரை குறித்த அன்றன்றைய தகவல்களை ஆர்வத்துடன் கேட்டு வருகிறார் அமித் ஷா.
அதிமுக., வுடன் கூட்டணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள புதிய சூழலில் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட பாத யாத்திரை தொடங்குவதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.