
பகுதி 11 – கங்கைகொண்ட சோழபுரம் (2)
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சோழர்குலம் கி.பி. 1279ல் முடிவுறவே அரண்மனைகள் உட்பட நகரில் இடிந்த கட்டிடங்களின் செங்கற்களை ஊர்மக்கள் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மேலும் சென்ற நூற்றாண்டில் மற்றொரு நிகழ்ச்சி ஏற்பட்டது. அதாவது, லோயர் அணைக்கட்டு என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கீழஅணையும் கொள்ளிடத்திற்குப் பாலமும் கட்டியபொழுது அரசாங்க அதிகாரிகள் கருங்கல்லால் பாலம் கட்டினால் வலுவாக அமையுமெனக் கருதி, அருகே கருங்கல் கிடைக்காத நிலையில், கங்கைகொண்ட சோழபுரக் கோயிலில் இடிந்து கிடந்த கற்களை எடுத்துச் சென்றதுடன் குறையாக நின்ற மதிலையும் இடித்துக் கற்களை எடுத்தனர்.
ஊர் மக்கள் அதனை எதிர்த்ததும், வேறு செங்கல் மதிலைக் கட்டித் தருவதாக அதிகாரிகள் வாக்களித்தனர். ஆனால் பிறகு எதுவும் நிகழவில்லை. கோயிலில் இருந்து அகற்றப்பட்ட கருங்கற்களில் பல கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அவையாவும் இவ்வாறு அழிந்துவிட்டன. கோயிலில் எஞ்சி உள்ள கல்வெட்டுக்கள் சிலவே. அவற்றிலும் சில மிகவும் சிதைந்துள்ளன. கங்கை கொண்ட சோழனின் கல்வெட்டு ஒன்றுகூட அங்குத் தற்பொழுது காண்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள சிங்கமுகக்கேணியின் மீதுள்ள கல்வெட்டு அதை உடையார்பாளையம் ஜமீன் கட்டியதாகக் கூறுகிறது. ஆனால் அக்கேணி முதலாம் இராசேந்திரன் காலத்திலேயே கட்டப்பட்டு சென்ற நூற்றாண்டில் ஜமீன்தாரால் திருப்பணி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சோழப் பேரரசை வென்ற சடையவர்மன் முதலாம் சுந்தர பாண்டியனும், சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தை அழித்தான் எனினும் கோயிலுக்கு எவ்வித ஊறும் விளைவிக்க வில்லையென்றும்; மாறாகத் தன் பெயரால் பெருமானுக்குப் பூசை நடத்த நிவந்தம் வைத்தான் என்பதும் தெரிகின்றது.
இத்தலம் திருவிசைப்பாத் தலம் ஆகும். இத்தலத்திற்கு ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் – சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
160 அடி உயரமுள்ள ஓங்கிய எண்தள விமானம் (கோபுரம்) பல கி.மீ. தொலைவிலிருந்து பார்த்தாலும் காட்சியளிக்கிறது. இவ்வூர் பண்டை நாளில் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது. இத்தலம் தற்பொழுது சிற்றூராக உள்ளது. இங்குப் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் ஏதுமில்லை.
கோயிலமைப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயிலமைப்பே ஒத்துள்ளது. சிற்பக் கலையழகு சிந்தனைக்கு எட்டாதது. இக்கோயிலில் தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் சிறப்பானது வீரராசேந்திர சோழனது கல்வெட்டாகும். இதிலிருந்து, இக்கோயிலுக்கு விடப்பட்டிருந்த ஊர்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்து பத்தாயிரம் கலம் நெல் இக்கோயிலுக்கு அளக்கப்பட்டது என்ற செய்தி தெரிகிறது. முதலாம் இராசேந்திரன் இங்குள்ள பெருமானுக்குத் தஞ்சைப் பெருவுடையாரின் பெயரையே வைத்து வழங்கினான்.
மூலவர் சிவலிங்கமூர்த்தி கிழக்கு நோக்கியுள்ளார், பேருருவம் 13 அடி உயரம்; ஆவுடையார் சுற்றளவு 60 அடி, ஒரே கல்லால் ஆனவை; விமானம் 160 அடி உயரம் – 100 அடி சதுரமானது. மின் விளக்கு இல்லையெனினும், வெளியிலுள்ள பெரிய நந்தியின் மீது படும் ஒளி பிரதிபலித்து, சுவாமி மீது படுவதால் நன்கு தரிசிக்க முடிகிறது. மூலவர் முன்பு நிற்குங்கால் – வெளியில் கொதிக்கும் வெயிலாக இருந்த போதிலும் – உள்புறம் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது.
இதற்குச் சொல்லப்படும் காரணம், மூலவரின் அடியில் சந்திரக் காந்தக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெப்பக் காலத்தில் வெளியில் கொதிக்கும் வெயிலாக இருக்கும்போது உள்ளே சில்லென்றிருக்கின்றது. இவ்வாறே மார்கழி போன்ற குளிர்காலத்தில் உள்ளே கதகதப்பாக இருக்கின்றது என்று சொல்லப்படுகிறது.