spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஜாதியில் ஜோதியைச் காணும் அரசியல்வாதிகள்!

ஜாதியில் ஜோதியைச் காணும் அரசியல்வாதிகள்!

- Advertisement -
write thoughts

— ஆர். வி. ஆர்

அநேக அரசியல் கட்சிகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானங்கள் இவை:

“காங்கிரஸ் தலைமை ஏற்கும் மத்திய ஆட்சியில் நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.”

“பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப் பட்டவர்கள் தங்களின் மக்கள் தொகை விகிதப்படி சலுகைகள் பெற ஏதுவாக, 50-சதவிகித இட ஒதுக்கீட்டு உச்சவரம்பானது சட்டத்தின் மூலம் நீக்கப்படும்”

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “நமது நாட்டின் ஏழை மக்களை உயர்த்திவிடும் ஒரு முற்போக்கான பலம் வாய்ந்த நடவடிக்கை, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு” என்றார்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்காக ஏன் நமது அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்கள்? அவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களா? ஆம், அப்படித்தான்.

நாம் பிறந்த ஜாதி இரண்டு வகைகளில் நம்முடன் தொடர்புடையது. ஒன்று இயல்பானது. அதாவது, நம் ஒவ்வொருவருக்கும் சுய-ஜாதிப் பிரக்ஞை என்பது இயற்கையாக உண்டு. நமது ஜாதி மனிதர்களோடு – அதுவும் ஒரே பொருளாதார நிலையில் உள்ள மனிதர்களோடு – இருக்கும்போது நமக்குள் ஒரு நெருக்கத்தை நாம் ஒரே ஜாதியினராய் உணரலாம். ஜாதி நம் மக்களுக்கு இதமான, அவர்கள் விரும்புகிற, ஒரு அடையாளம்.

ஜாதியுடனான நமது இரண்டாவது வகைத் தொடர்பு சற்று சிக்கலானது. இந்தத் தொடர்பில் ஒவ்வொருவரும் ஜாதியைத் தாண்டி ஒரு தனி மனிதன் என்றிருப்பது நல்லது. நமது ஜாதியோடு நாம் ஒன்றி இருப்பதா, தள்ளி இருப்பதா அல்லது வேறுபட்டு நிற்பதா என்றும் நாம் பார்க்க வேண்டிய தருணங்கள் இருக்கும். ஒரு குடும்பத்தில் உள்ளது போல், ஒரு குழுவில் சரியும் இருக்கும், தப்பும் இருக்கும். அது போலத்தான் ஜாதிகளுக்குள்ளும்.

நமது ஜாதியுடன் நமக்குள்ள இரண்டாவது வகைத் தொடர்பில்தான் அரசியல்வாதிகள் எளிதாக நுழைகிறார்கள். குறிப்பாக, பின் தங்கிய அல்லது பிற்படுத்தப் பட்ட ஜாதி மக்களைப் பார்த்து, “உங்கள் ஜாதிக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள். உங்களைக் கைதூக்கி விட்டு, உங்களுக்கு அதிக விகிதத்தில் கல்விச் சேர்க்கைகள், அரசுப் பணியிடங்கள் கிடைக்க நாங்கள் வழி செய்வோம்” என்று அந்த அப்பாவி மக்களிடம் தொடர்ந்து பேசி அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்து ஆட்சிக்கு வருவதுதான் அரசியல்வாதிகளின் குறி.

இத்தகைய அரசியல்வாதிகளைப் பற்றி, அவர்கள் குறி வைக்கும் அப்பாவி மக்கள் என்ன நினைப்பார்கள், என்ன நினைக்க முடியும்? சிலர் சந்தேகம் இல்லாமல் நம்புவார்கள். சிலருக்கு இந்த விஷயமே புரியாது. இன்னும் சிலர், ‘நமது ஜாதிக்குத் துணை நிற்போம், நம் ஜாதி மக்கள் அனைவரையும் முன்னேற்றுவோம் என்கிறார்களே அரசியல்வாதிகள்? அந்த அரசியல்வாதிகளில் நமது ஜாதித் தலைவர்களும் இருக்கிறார்களே? அவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள் என்று நாம் நினைக்கலாமா? அப்படி நினைத்தால் நமது ஜாதி மக்களுக்கு எதிராகவும் நமது ஜாதி நன்மைக்கு விரோதமாகவும் நாம் செயல்படுவதாக ஆகி விடுமோ? பேசாமல் இந்த அரசியல்வாதிகளை நாமும் வரவேற்போம்’ என்று எண்ணுவார்கள்.

அறியாமையும் ஏழ்மையும் நிறைந்த நம் நாட்டில் அநேகமாக அனைத்து ஜாதி மக்களும் அப்பாவி மக்கள் தான். அவர்களைப் பெரிய பெரிய குழுக்களாக வைத்து ஏய்க்கும் ஒரு கருவியாகத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நமது அரசியல்வாதிகள் பார்க்கிறார்கள்.

நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சட்டம் நான்கு வித ஜாதிகளில் வைத்துப் பார்க்கிறது. ஒன்று, “எஸ்.சி” (SC) எனப்படும் பட்டியல் ஜாதிகள். இரண்டு, “எஸ்.டி” (ST) எனப்படும் பட்டியல் பழங்குடியினர் – அதாவது, அவர்களின் பல ஜாதிவகையினர். மூன்று, “ஓபிசி” (OBC) எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – இவர்கள் பல்வேறு குறிப்பிட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்கள். நான்கு, இந்த மூன்றிலும் வராத பிற ஜாதிகள் – பேச்சு வழக்கில் இவை ‘முன்னேறிய ஜாதிகள்’ என்று சொல்லப் படுகின்றன. இவற்றில் முதல் மூன்று மட்டும் (எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி) இட ஒதுக்கீட்டுப் பயன் பெறும் ஜாதிகள். அரசியல்வாதிகள் இந்த மூன்று வித ஜாதிகளில்தான் ஜோதியை ஓட்டு வடிவில் காணத் துடிக்கிறார்கள்.

கல்விச் சேர்க்கைகளிலும் அரசுப் பணி இடங்களிலும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் ஜாதிகளாக மத்திய அரசு நாடு முழுவதற்கும் அறிவித்திருக்கும் ஜாதிகள் எத்தனை தெரியுமா? மாநிலங்கள் வாரியாகப் பிரித்துச் சொல்லப் பட்டிருக்கும் அவற்றைக் கூட்டிப் பார்த்தால் எஸ்.சி ஜாதிகள் 1,248, எஸ்.டி ஜாதிகள் 781, ஓபிசி ஜாதிகள் 2,479 என்பதாக அவை ஒட்டு மொத்தமாக 4,508 என்று இன்டர்நெட்டில் தெரிகிறது. இவற்றில் சில ஜாதிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் உள்ளதாகும். இருந்தாலும் மத்திய அரசின் இட ஒதுக்கீடிட்டில் இடம் பெறும் ஜாதிகள் நிச்சயம் ஆயிரக் கணக்கில் உண்டு.

மாநில அரசுகளும் அவற்றுக்கான பணியிடங்கள், மாநிலங்களின் கீழ் வரும் கல்விச் சேர்க்கைகள், என்பதற்காகத் தனியாக ஓபிசி ஜாதிகளை அங்கீகரிக்கும் – மத்திய அரசுப் பட்டியலைவிட கூடக் குறைய இதில் ஜாதிகள் இருக்கும்.

சரி, காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் போட்ட தீர்மானத்தின் அர்த்தம்தான் என்ன?

அந்தத் தீர்மானத்தின் படி, காங்கிரஸ் தலைமையில் ஒரு புதிய ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றால், இந்தியாவில் உள்ள மனிதர்கள் அனைவரும் என்ன ஜாதியில் எத்தனை பேர்கள் உள்ளார்கள் என்பதை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மத்திய அரசு குறிப்பெடுக்கும். அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கீழ் வரும் கல்விச் சேர்க்கை இடங்கள், மத்திய அரசுப் பணி இடங்கள் ஆகியவற்றை ஜாதி வாரியாகக் கூறு போட்டு, இட ஒதுக்கீட்டுப் பயன் பெறும் ஆயிரக் கணக்கான ஜாதிகளுக்கு அந்தப் புதிய மத்திய அரசு வழங்கும்.

இட ஒதுக்கீட்டுக்கான ஜாதியினர் நமது மக்கள் தொகையில் கூட்டாக 75 சதவிகிதம் அல்லது 80 சதவிகிதம் என்று ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் தெரிகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால், அதே சதவிகிதத்தில் கல்விச் சேர்க்கை இடங்களையும், அரசுப் பணி இடங்களையும் அந்த ஜாதி மக்களுக்கு அவர்களின் ஜாதி எண்ணிக்கை விகிதங்களின் படி இட ஒதுக்கீடாகத் தர வேண்டும் என்று சொல்கிறது காங்கிரஸ். இதைச் செய்து முடிக்க, தற்போது இட ஒதுக்கீட்டு இடங்களுக்காக சுப்ரீம் கோர்ட் விதித்திருக்கும் 50 சதவிகித உச்ச வரம்பானது புதுச் சட்டம் மூலமாக நீக்கப் படும், இதெல்லாம் சமூக நீதி என்பதும் காங்கிரஸின் நிலை. இப்படித்தான் மற்ற பல அரசியல் கட்சிகளும் சொல்ல வருகின்றன. இட ஒதுக்கீட்டை இப்படி உயர்த்தினால் சுப்ரீம் கோர்ட் ஏற்குமா என்பது வேறு விஷயம்.

இந்தியாவில் தொழில்துறை முன்னேற்றம் போதுமானதாக இல்லை. அதனால் நம் நாட்டினர் மேலே படிக்கவும் வேலை தேடியும் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள் என்று பல அயல் நாடுகளுக்குப் போகிறார்கள். அந்த நாடுகளில் நம் நாட்டினருக்கு என்று இட ஒதுக்கீடு எதுவும் இல்லாமல்தான் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதே போல் நம் நாட்டிலும் நமது இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாமலே அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் நமது பொருளாதாரத்தை நமக்கு வளர்க்கத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்?

காங்கிரஸ் கட்சியின் – அது போன்று குரல் கொடுக்கும் பிற கட்சிகளின் – குறுக்கு சிந்தனையைப் பாருங்கள். நாட்டிலுள்ள 75 அல்லது 80 சதவிகித இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் படியாக நாட்டின் தொழில்துறையை வளர்க்கவும் பொருளாதாரத்தை நிர்வகிக்கவும் மாட்டார்களாம். அதற்கான நேர்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு, திட்டங்கள், திறன், திராணி, தலைமை எதுவும் இவர்களிடம் இல்லையாம். பதவியில் சுகித்தபடி இவர்களால் முடிவது என்னவாம்? யானைப் பசிக்கு சோளப் பொறியாக துளித் துளி எண்ணிக்கையில் உள்ள அரசுப் பணியிடங்களை நாட்டின் 75 அல்லது 80 சதவிகித ஜனங்களை அழைத்து “இந்தா உன் ஜாதிக்கும் உண்டு” என்று அங்கும் இங்கும் கொஞ்சம் தெளித்து விடுவார்களாம். இதற்கு சமூகநீதி என்று பெயராம்.

முன்பு தேச விடுதலைக்கும் நாட்டு நலனுக்கும் பாடு பட்ட காங்கிரஸ் கட்சி, இப்படித் தீர்மானம் போட்டு மக்களை ஏய்த்துப் பிழைக்க நினைக்கும் தலைமையிடம் சிக்கியிருக்க வேண்டாமே?

Author: R. Veera Raghavan, Advocate, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe