
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பனிரெண்டாம் நாள்
இலங்கை vs ஆஸ்திரேலியா
லக்னோ – 16.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இலங்கை அணியை (43.3 ஓவரில் 209, பதுன் நிசாங்கா 61, குசல் பெரேரா 78, சரித் அசலங்கா 25, ஆடம் சாம்பா 4/47, மிட்சல் ஸ்டார்க் 2/43, பேட் கம்மின்ஸ் 2/32, மேக்ஸ்வெல் 1/36) ஆஸ்திரேலிய அணி (35.2 ஓவரில் 215/5, மிட்சல் மார்ஷ் 52, லபுசேன் 40, இங்கிலிஷ் 58, மேக்ஸ்வெல் 38*, மதுஷங்கா 3/38) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் 125 ரன் அடித்த பின்னர் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவின் ஆட்டமாக மாறியது. அவர்கள் அடுத்த 84 ரன்களுக்கு அனைத்து இலங்கை விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், மட்டையாளர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவின் எதிர்க்க முடியாத பந்துவீச்சில் தங்கள் விக்கட்டுகளை இழந்தனர்.
முதல் விக்கட்டுக்கான பார்ட்னர்ஷிப் தவிர 32 ரன் கொண்ட இரண்டாவது பார்ட்னர்ஷிப்புக்குப் பின்னால் இலங்கை அணியின் சிறந்த ஸ்டாண்ட் 12 ரன்களாக இருந்தது.
ஆஸ்திரேலிய அணிக்காக, ஆடம் சம்பா 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்தார். இலங்கையின் புதிய கேப்டனும், சமீபத்திய மாதங்களில் சிறந்த பேட்டருமான குசல் மெண்டிஸின் விக்கெட்டை அவர் கைப்பற்றினார்.
தில்ஷான் மதுஷங்கா முதலில் ஒரு மெய்டன் ஓவரை வீசினார், பின்னர் அடுத்த ஓவர் இரட்டை விக்கெட் மைடன்-ஆக வீசினார். ஆனால் மறுமுனையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் எடுத்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார். பந்து வீச்சில் ஸ்விங் குறைந்தபோது, மதுஷங்காவின் பந்துகளையும் அடிக்க ஆரம்பித்தனர். மேலும் வேறு எந்த பந்துவீச்சாளரும் அவருக்கு இணையாகச் சிறப்பாக பந்து வீசவில்லை.
ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுசேன் ஜோடி 77 ரன்கள் சேர்த்தது. பின்னர் க்ளென் மேக்ஸ்வெல் உள்ளே வந்து தனக்குப் பிடித்த இலங்கை அணிக்கு எதிராக 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை 88 பந்துகளில் இலக்கை எட்ட வைத்தார். கடைசியில் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.
ஆடம் சாம்பா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியோடு ஆஸ்திரேலிய புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. நாளை தர்மசலா மைதானத்தில் நெதர்லாந்து அணியும் தென் ஆப்பிரிக்க அணியும் விளையாடுகின்றன.