spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்அவினாசியில் கொட்டும் மழையிலும் தொடங்கிய அண்ணாமலையின் 3ம் கட்ட பாத யாத்திரை!

அவினாசியில் கொட்டும் மழையிலும் தொடங்கிய அண்ணாமலையின் 3ம் கட்ட பாத யாத்திரை!

- Advertisement -
annamalai in avinasi

தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை, தனது 3ம் கட்ட பாத யாத்திரையை அவிநாசியில் கொட்டும் மழையில் நனைந்தபடி தொடங்கி வைத்து, மக்களை சந்தித்தார். அப்போது, ‘கோவில் சிலைகள் திருடப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. கோவிலுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது’ எனக் கூறினார்.

தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை தமிழகத்தில், ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரையை நடத்தி வருகிறார். இதுவரை இரண்டு கட்டங்களாக அவரது பாத யாத்திரை நடந்து முடிந்துள்ளது. சிறிது இடைவெளிக்கு விட்டு, அரசியல் சலசலப்புக்குப் பின், குறிப்பாக அதிமுக., கூட்டணி முறிவுக்குப் பின்னர் அவரின் 3ஆம் கட்ட பாதயாத்திரை அக்.16 இன்று தொடங்கியது.

பாஜக.,வினருக்கு செல்வாக்கு மிக்க கொங்குப் பகுதியில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, 19ம் தேதி பல்லடம், 20ம் தேதி திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதியில் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார். இன்று தொடங்கிய பாதயாத்திரையில், மத்திய அமைச்சர்கள் பியுஷ்கோயல், எல்.முருகன், பாஜக., சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாத யாத்திரை தொடங்கியதும், அந்தப் பகுதிகளில் கனமழை கொட்டியது. மழையைப் பொருட்படுத்தாமல் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடி பாத யாத்திரை மேற்கொண்டனர். அவர்களுக்கு பாஜக., தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

யாத்திரையின் போது நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்களிடம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியபோது, “சனாதன விவகாரத்தில் உதயநிதிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்கிறார். ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக, காங்கிரசை தோற்கடிக்க வேண்டும். தமிழகம் விரும்பும் மாற்றத்தை அண்ணாமலை வழங்குவார். தமிழகத்தின் இளம் தளபதி அண்ணாமலை, நாட்டின் உயர்வுக்கு உழைக்கிறார். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல, பிரதமருக்கு பின் அண்ணாமலை உழைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.

அண்ணாமலை பேசியபோது, கோவில் சிலைகள் திருடப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய திருடன் ஹிந்து அறநிலையத்துறை தான். கோவிலுக்கும், ஹிந்துக்களுக்கும் எதிரான ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பிரதமர் மோடி சொன்னதை பொய் என்று கூறும் ஸ்டாலின்தான் பொய் சொல்கிறார் என்று பேசினார்.

அவர் பேசிய விவரங்களை, அண்ணாமலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்….

இன்றைய #EnMannEnMakkal பயணம், தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் முதல் தலமான, எம்பெருமான் அவிநாசியப்பர் காத்து வரும் அவிநாசியில் இனிதே நடந்தேறியது. மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்கள், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அண்ணன் திரு L முருகன் அவர்கள் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவிநாசி என்றால் அழிக்க முடியாதது என்று பொருள். சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் அவிநாசி ஈஸ்வரரைப் போற்றி சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் பாடிய தலம் இது. காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகள் புண்படுத்துவதும் தொடர்கிறது. கோவில்களில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையே கொள்ளை அடிக்கிறது. இதைத் தான் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் சமீபத்தில் சுட்டிக்காட்டி பேசினார். 1985-1987 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், இந்து அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களுக்கு 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இப்போது 3.25 லட்ச ஏக்கர் நிலங்களே உள்ளன. 2 லட்ச ஏக்கர் எங்கே போனது?

கோவிலையும், கோவிலின் சொத்துக்களையும் பாதுகாக்க துப்பில்லாத அரசுக்கு கோவிலில் என்ன வேலை? மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனபிறகு, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 361 சிலைகள் மற்றும் பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. கோவிலை பாதுகாப்பதை பற்றி பேச நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. கோவில் பாதுகாப்பில் கோட்டை விட்ட அறநிலையத்துறை, கோவிலை விட்டு வெளியேற வேண்டும்.

தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பாசன மேம்பாட்டிற்காக நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கிய நிதி 2962 கோடி ரூபாய். அத்திக்கடவு அவிநாசி திட்டம், 65 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் 2019 பிப்ரவரி 28 ல் 1652 கோடி மதிப்பில் திட்டம் பூமி பூஜை போடப்பட்டு 02-05-2021 வரை 16 மாதத்தில் 83% பணிகள் நிறைவடைந்தது. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த 28 மாதங்களில், மீதமுள்ள 17% பணிகள் முடிக்கப்படாமல், மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

தமிழக நெசவாளர்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெசவாளர்களுக்குத் தனி கூட்டுறவு வங்கி, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து அரசுப் பள்ளி சீருடை கொள்முதல், அரசு நூல் கொள்முதல் நிலையம், அதுமட்டுமல்லாது, திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளான, திருப்பூரில் கழிவு அகற்றும் பொதுவான சுத்திகரிப்பு வசதி, திருப்பூரில் சிறப்பு மின் வழித்தடம், திருப்பூரில் வர்த்தக மையம், திருப்பூரில் ESI மருத்துவமனைகள் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக.

நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒரே சமயத்தில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் வழங்கியுள்ளார். அதில் ஒன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 28,323 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 3,65,331 வீடுகளில் குழாயில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளன. 1,66,352 வீடுகளில் இலவச கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளது. 45,344 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மத்திய அரசு 300 ரூபாய் மானியம் வழங்குகிறது. மற்றவர்களுக்கும் 200 ரூபாய் மானியம் வழங்குகிறது மத்திய அரசு. ஆனால், திமுக சொன்ன 100 ரூபாய் மானியம் இதுவரை வழங்கவில்லை. 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,07,359 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 89,490 விவசாயிகள், கிஸான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் பெறுகிறார்கள். 3850 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி திருப்பூர் பகுதி அருகில் இருக்கும் செவ்வூர் TMV-7 ரக நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற பாஜக எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.

வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், இந்த ஊழல் கூட்டணியைத் தோற்கடித்து, மக்கள் பேராதரவுடன் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆவது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe