
பகுதி 12 – கங்கைகொண்ட சோழபுரம் 3
மூலவரை வணங்கியபின் வெளியே வந்து வலமாக வரும்போது பிட்சாடனர், அர்த்த நாரீசுவரர், தட்சிணாமூர்த்தி, நடராசர், சுகாசனர், சண்டேச அநுக்ரஹர், கஜசம்ஹாரர், ஞானசரஸ்வதி முதலிய அருமையான சிற்பமூர்த்தங்களைக் கண்ணாரக் கண்டு மகிழலாம். அரிய சிற்பக் களஞ்சியம் அழகிழந்து நின்று அருமையை பறைசாற்றுகிறது.
கோயிலின் சிறப்புக்களை இணைதளத்தில் படித்துவிட்டு நேரில் காணச் செலவோருக்கு மிஞ்சுவது, இடிபாடுகளைக் காண்பதால் வரும் வேதனையே. கோயிலுக்கு முன்னால் மொட்டைக்கோபுரம் – வாயில் தாண்டியதும் அழகான நடைபாதை – சுற்றிலும் புல் தரைகள். வலப்பால் மகிஷாசுரமர்த்தினி கோயில் உள்ளது. அம்பாள் இருபது கரங்களுடன் காட்சித் தருகிறாள். அபயவரதம் நீங்கலாக 18 கரங்களில் 18 ஆயுதங்கள் உள்ளன. பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நாளில் இத்தேவிக்கு, காவடி எடுத்து விழாக் கொண்டாடப்படுகிறது.
சற்றுத் தள்ளிச் சென்றால் சுதையாலான பெரிய யாளி காட்சி தருகிறது. அதனுள் இறங்கிச் சென்று “சிம்மக்கிணற்றை”க் காணலாம். இக்கிணற்றில் கங்கை நீர் கலந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மதிற்சுவர்கள் இடிந்து போயுள்ளன. உள்ளே நுழைந்து செல்லும்போது வலப்பால் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது.
ஒன்பது கிரகங்களும் வான சாத்திர முறைப்படி ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன்; சுற்றிலும் எட்டு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன. கீழே ஏழு குதிரைகள் பூட்டிய தேரை அருணன் சாரதியாக இருந்து செலுத்துவது; ஒருபால் 12 பேர் நாதஸ்வர வாத்யங்களை வாசிப்பது, கடையாணி பூட்டிய தேரில் உலகை வலம்வரும் கோலம் – மிகவும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் மூலம், ஊர்ப் பெயர் வடகரை விருதராச பயங்கர வளநாட்டு மேற்காநாட்டு மண்ணை கொண்ட சோழவள நாட்டு கங்கை கொண்ட சோழபுரம் என்றும்; இறைவன் பெயர் திருப்புலீஸ்வரமுடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும் சிவபெருமானுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்குத் திருநாமத்துக்காணி என்றும், திருமாலுக்கு அளிக்கப்பட்டது திருவிடையாட்டம் என்றும் பெயர் வழங்கப் பெற்றன என்ற செய்தியும்; மன்னனார் என்பது திருமாலுக்குப் பெயர்.
அவர் எழுந்தருளிய காரணத்தால் அப்பதி மன்னனாகுடி என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்து மன்னார்குடி என்றாயிற்று. அதன் பழம்பெயர் வீரநாராயண நல்லூர் என்பதே என்பன போன்ற பல செய்திகள் இக்கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகின்றன.
இத்திருக்கோயிற் பெருமானுக்கு இராசேந்திர சோழன் கங்கை நீராட்டியதை நினைவு கூறும் வகையில் 108 குடங்கள் கங்கை நீரால் அபிஷேகம் 1985, 1986ஆம் ஆண்டுகளில் செய்வித்து, அது முதல் ஆண்டுதோறும் சுவாமிக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வதற்கும் ஸ்ரீ காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திரரால் வழிவகை செய்யப்பட்டு நடந்துவருகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக திண்டிவனத்தை சுமார் மூன்று மணி நேரத்தில் அடைந்தோம். திண்டிவனத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, தேசிய நெடுஞ்சாலை 32 வழியாக பெரம்பூர் வந்தடைந்தோம்.
இவ்வாறாக எங்களின் குலதெய்வக் கோயிலான கண்டியூர் வடிவுடையம்மனைத் தரிசித்துவிட்டு, பல திருக்கோயில்களையும் பார்த்துவிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்த்துவிட்டு சென்னை திரும்பினோம்.