spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுற்றுலாநம்ம நாட்டு சுற்றுலா: தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி

நம்ம நாட்டு சுற்றுலா: தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி

- Advertisement -
dauligiri odissha

8. தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          லிங்கராஜா கோயிலைத் தரிசித்த பின்னர், காலை சிற்றுண்டியை முடித்த பின்னர் நாங்கள் பூரியை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தோம். வழியில் தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபியைத் தரிசித்துவிட்டு முதலில் கொனார்க் சூரியக் கோவிலுக்கும் பின்னர் பூரிக்கும் செல்வதாகத் திட்டம். புவனேஷ்வரத்தில் இருந்து பூரி செல்லு வழியில் 16 கிலோமீட்டர் தொலைவில் தௌலிகிரி என்ற மலை உள்ளது. அங்கே ஒரு சாந்தி ஸ்தூபி உள்ளது.

          தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி அமைதி பக்தா என்றும் அழைக்கப்படுகிறது. மன்னன் அசோகர் அமைதி மற்றும் அமைதியின் பாதையை ஏற்றுக்கொண்டு புத்த மதத்தை நாடியதால், கலிங்கப் போர் முடிவடைந்ததாக அறியப்படும் இந்த இடத்தில் சாந்தி ஸ்தூபிக்கு அடித்தளம் அமைத்தார் எனக் கருதப்படுகிறது. இங்கு ஏராளமான பௌத்த பக்தர்கள் வருகை தரும் புத்தரின் ஆணை ஒன்றைக் காணலாம்.

          தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி 1970ஆம் ஆண்டு ஜப்பான் புத்தமதச் சங்கத்தின் உதவியோடு ஒரிசா மாநில அரசால் கட்டப்பட்டது.           ஸ்தூபியின் ஒட்டுமொத்த அமைப்பு ஒரு குவிமாட வடிவில் உள்ளது. கல் பலகைகளுக்கு மேல் புத்தர் காலடித் தடங்களையும் போதி மரத்தையும் ஒருவர் காணலாம். பேனல்களுக்கு மேல், புத்தபெருமானின் முன் போர் வாளை வைத்திருக்கும் அசோகரின் உருவத்தையும் ஒருவர் காணலாம். இந்த ஸ்தூபிக்கு அருகாமையில், சதர்ம விஹார் மடாலயம் என்று அழைக்கப்படும் ஒரு மடாலயம் உள்ளது, இது புத்த பக்தர்களால் அதிகம் பார்வையிடப்படுகிறது. சாந்தி ஸ்தூபியிலிருந்து சிறிது தூரத்தில், 1972ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட தவலேஷ்வர் கோவிலைக் காணலாம், மேலும் இது இந்து மற்றும் பௌத்த பக்தர்கள் அடிக்கடி வருகை தரும் இடம்.

மாமன்னர் அசோகரின் கல்வெட்டு

          தௌலிகிரி மலையியின் சாந்தி ஸ்தூபி வரை கார் செல்லும் பாதை உள்ளது. அது ஒரு சிறிய மலை. மலைமீது ஏறிப் போகின்ற வழியில் அசோகரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. தற்போது அந்தக் கல்வெட்டு எவரும் சிதைத்துவிடாதபடி ஒரு கம்பித் தடுப்புக்குப் பின்னால் உள்ளது. கிமு 262 முதல் கிமு 261 வரை பேரரசர் அசோகரின் தலைமையில் – கலிங்க அரசிற்கும் மௌரியப் பேரரசிற்கும் இடையே நடந்த கலிங்கப் போருடன் இது ஆழமான வேரூன்றிய தொடர்பைக் கொண்டுள்ளது.

          மகாநதி ஆற்றின் கிளை நதியான தயா ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள தௌலி மலை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் போர் நடைபெற்றது. புகழ்பெற்ற அசோகரின் கல்வெட்டுகள் செதுக்கப்பட்ட இடம், தௌலி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது, இது இந்திய தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கப்படுகிறது. 

          பாறைகள், குகைச் சுவர்கள் மற்றும் தூண்களில் பொறிக்கப்பட்ட 33 தனித்தனி கல்வெட்டுகள் தளத்தில் உள்ளன. இந்தக் கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் தம்மத்தின் அதாவது புத்த தர்மத்தின் செய்தியைக் கொண்டுள்ளன, அதாவது ‘நல்ல நடத்தை’, ‘சரியான நடத்தை’ மற்றும் ‘மற்றவர்களிடம் கண்ணியம்’. இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பாறையில் செதுக்கப்பட்ட யானைச் சிற்பம். இந்த யானைச் சிற்பம் பாறை முகத்தில் இருந்து துருத்தி நிற்கிறது; யானை பாறையில் இருந்து வெளிவருவது போல் செதுக்கப்பட்டுள்ளது.

          முக்கிய பாறைகளில் ஒன்று கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கட்டிடக்கலை ஆர்வலர்கள் இந்த வரலாற்றுக் கட்டமைப்பை நெருக்கமாகக் காணும் வாய்ப்பை வழங்குகிறது. வளாகத்தில் அழகான தோட்டமும் உள்ளது.

தௌலிகிரியில் உள்ள அசோகன் பாறை ஆணைகளின் வரலாறு

          பேரரசர் அசோகர் தனது பேரரசை விரிவுபடுத்தும் முயற்சியில் கிமு 262 இல் கலிங்க இராச்சியத்தை (இன்றைய ஒடிசா) தாக்கினார். இது பிரபலமான கலிங்கப் போருக்கு வழிவகுத்தது, இதில் இரு தரப்பிலிருந்தும் 2,00,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர் இழந்தனர் அல்லது பலத்த காயம் அடைந்தனர், தயா நதி முழுவதுமாக இரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியது. இந்த முழுக் காட்சியும் பேரரசர் அசோகரின் மனசாட்சியை உலுக்கியது மற்றும் அவருக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. இந்தப் போர்தான் அவரது பாதையை மாற்றி அமைதியை விரும்பும் பௌத்த மதத்திற்கு அவரை அழைத்துச் சென்றது.

          பௌத்தத்தின் சித்தாந்தங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, அவர் தனது அறிவிப்புகள், செய்திகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஆகியவற்றின் கல்வெட்டுகளை இயற்கையான பாறை முகங்கள் மற்றும் கல் தூண்களில் நாடு முழுவதிலும் செதுக்கி வைத்தார். இலங்கை, சீனா, தாய்லாந்து, கிரீஸ் போன்ற நாடுகளுக்கும் தனது தூதர்களை அனுப்பி புத்த மதக் கொள்கைகளைப் பரப்பினார். தௌலியில், போர்க்களத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு பாறையைத் தேர்ந்தெடுத்து, அவர் தனது அறிவிப்புகளின் கல்வெட்டுகளை உருவாக்கினார்.

          இருப்பினும், இந்த கல்வெட்டுகள் 19ஆம் நூற்றாண்டு வரை யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகி ஜேம்ஸ் பிரின்செப் என்பவர் அதைத் தேடத் தொடங்கினார். அவர் வங்காளத்தின் ஆசிய சங்கத்தின் (Asiatic Society) தலைவராக இருந்தார், மேலும் இந்தியாவின் இஸ்லாமியத்திற்கு முந்தைய காலத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சாஞ்சி ஸ்தூபியில் உள்ள அசோகர் கல்வெட்டுகளை முதன்முதலில் புரிந்துகொண்டவர் பிரின்செப். அவர், மற்றொரு பிரிட்டிஷ் அதிகாரி மார்க்கம் கிட்டோவுடன் சேர்ந்து, தௌலியில் அதுவரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த அசோகரின் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

          அசோகரின் ஒரு முக்கியமான பாறைக் கல்வெட்டைப் பார்த்த மகிழ்ச்சியில் நாங்கள் கொனார்க் நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe