ஆமா… ப்ப்ப்ப்ப்ப்ளான் பண்ணிட்டு வாங்க…! வெளியூர்லேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வர்றவங்கள்ல பெரும்பாலானவங்க செய்யுற பெரிய தப்பு என்னன்னா கன்னியாகுமரியில ரூம் போடுறது. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா தலங்களை சுத்திப்பார்க்க இரண்டு நாட்கள் போதுமானது. ஒரு நாள் கூடுதலாக இருந்தால் இன்னும் நல்லது.
திருச்சியைச்சேர்ந்த நண்பர் ஷண்முகநாதன் இந்த வருடம் குமரிக்கு டூர் வருவதாக சொன்னார். வருவதற்கு முன்பு கன்னியாகுமரியில் நல்ல ஹோட்டலில் ரூம்போடச்சொன்னார்.
“கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய பகுதின்னா நாகர்கோவிலைச்சொல்லலாம். அங்கே ரூம்போட்டா எந்த ஊருக்கும் போகிறது வசதியாக இருக்கும்!” என்றேன்.
அதன்படி நாகர்கோவில் விஜயதாவில் ரூம்போட்டேன்.காலையில் திருவட்டாறுக்கு காரில் குடும்படுத்துடன் வந்தார். நேராக திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளை தரிசித்தோம்.
பின்னர் அருவிக்கரை மினி அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பேச்சிப்பாறை அணைக்கட்டு, திற்பரப்பு அருவியில் சுகமான குளியல், குலசேகரத்தில் சாப்பாடு, மதியத்துக்கு மேல் பத்மனாபபுரம் அரண்மனை சுற்றிப்பார்த்தல், மாலையில் அலைகள் மோதும் முட்டத்தில் சூரிய அஸ்தமனம் முடிந்து நாகர்கோவிலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் அதிகாலையில் கன்னியாகுமரியில் சூரிய உதயம், விவேகானந்தர் பாறை, வட்டக்கோட்டை, சுசீந்திரம் உட்பட சில ஊர்கள் பார்த்துவிட்டு ஊர் திரும்பினார்கள்.
”சார், நான் கன்னியாகுமரின்னா ஏதோ காஞ்சு போன ஊருன்னு நினைச்சுகிட்டிருந்தேன். ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுகிட்டிருந்தேன். அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆனபிற்பாடுதான் தெரிஞ்சது நீங்க எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைப்பசேல்ல்னு,, எங்கேயும் செழுமையா..
அப்புறம் அருமையான திருவட்டாறு பெருமாள் கோயில், அருவிகள், ஆறுகள், சுத்தமான தண்ணீர், உங்களைப்பார்த்தா பொறாமையா இருக்கு! கன்னியாகுமரியின் அழகில் நாங்க எங்களை பறிகொடுத்திட்டோம்.அடுத்த வருஷம் இரண்டு நாள் கூட இருந்து இன்னும் குமரியின் அழகை எல்லாம் பார்த்துட்டுத்தான் திரும்புவோம்!” என ஷண்முகநாதன் குடும்பத்தினர் திரும்பும்போது மகிழ்ச்சி கூறினர்.
குழந்தைகளுக்கு ஊரை விட்டுப்போகவே மனமில்லை.. மறக்காமல் நாகர்கோவில் பேமஸ் கரகர மொறு மொறு நேந்திரங்காய சிப்ஸ் வாங்கிக் கொண்டனர்.
எனக்கே ஆச்சரியம் காரில் பயணம் செய்து இரண்டே நாளில் முக்கியமான ஊர்களை ரசிச்சு ரசிச்சு பார்க்கமுடிந்தததை நினைத்து.! மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தேன்.
இரண்டு நாள்களுக்கு முன்பு முகநூலில் அறிமுகமான நண்பர் கன்னியாகுமரியில் ரூம்போட்டார். அவரால் சூரிய உதயம், மற்றும் கன்னியாகுமரியை மட்டுமே சரியாக பார்க்க முடிந்த்து. மற்ற ஊர்களைப்பார்க்க நேரம் இடம் கொடுக்கவில்லை.
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கிறது என்னன்னா,, குமரிமாவட்டத்துக்கு டூர் வர்றவங்க, இங்கே உள்ள நண்பர்களிடம் நன்கு விசாரித்து, ப்ப்ப்ப்ளான் பண்ணிட்டு வந்தால் அதிகமான இடங்களை பார்த்து ரசிக்க முடியும்ங்கிறதுதான்!
- டி.எஸ்.குமார்