மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை போடும் போது அ.தி.மு.க.வினருக்கும் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் – கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 219 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்புகள் மலர் அஞ்சலி செலுத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அதில் டி.டி.வி.தினகரன் 9:30 மணிக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தெரிவிக்கப் பட்டு பின்னர் நேரம் 11 மணியாக மாறுதல் செய்யப்பட்டது.
இதனிடையே 10:30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட அவைத் தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
அப்போது ஏற்கெனவே சிலை அருகே கூடியிருந்த டி.டி.வி.தினகரன் தரப்பினருக்கும் அ.தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
டி.டி.வி. தரப்பினர் சசிகலா வாழ்க எனவும் டி.டி.வி.வாழ்க எனவும் கோஷங்களை எழுப்பினார்கள். அ.தி.மு.க.வினர் டி.டி.வி. தரப்பினருக்கு எதிராக ஜெயலலிதா வாழ்க எனவும் எடப்பாடி பழனிசாமி, ஒ.பி.எஸ். வாழ்க எனவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனால் அ.தி.மு.க.வினருக்கும் டி.டி.வி. தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் – குழப்பம் நிலவியது. அதை தடுக்க வந்த போலீஸாருக்கும் கட்சி காரர்களுக்கும் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



