
பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி மற்றும் ராவல்பிண்டி இடையே தேஜ்காம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கராச்சியில் இருந்து நேற்று புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை பஞ்சாப் மாகாணத்தின் லியாகத்பூர் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது இந்த ரயிலின் ஒரு பெட்டியில் தீ பிடித்தது. இந்த தீ அடுத்தடுத்து 3 பெட்டிகளுக்கும் பரவியதால் ரயில் நிறுத்தப்பட்டது.
ஆனால் ரயிலின் 3 பெட்டிகளும் எரிந்து சாம்பலாகின. இதில் பயணித்தவர்களில் இதுவரை 65 பேர் இறந்துள்ளனர். லியாகத்பூர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ரயில் பெட்டியிலேயே பயணிகள் சிலர் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி காலை உணவு சமைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.