
அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து உதைத்து கும்பல் பொருட்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அமைச்சராக இருந்தவர் பெர்னார்டு தபை. இவரது மனைவி டாமினிக் தபை. அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரான பெர்னார்டுஸ பாரீஸ் அருகே உள்ள காம்ஸ் லா வில்லே பகுதியில் அமைந்த தனது வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டிற்குள் நேற்று அதிகாலை 4 மணிக்கு திருடர்கள் நுழைந்துள்ளனர். அவர்கள் பெர்னார்டு மற்றும் அவரது மனைவியை அடித்து உதைத்துள்ளனர். அப்போது வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறியுள்ளனர்.

பின்னர் இருவரையும் கயிற்றில் கட்டி போட்டுவிட்டனர். பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றனர். டாமினிக் கயிற்றை அவிழ்த்துக் கொண்டு எப்படியோ தன்னை விடுவித்து கொண்டு அக்கம்பக்கத்தார் உதவியுடன் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
லேசாக காயமடைந்து இருந்த டாமினிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பெர்னார்டு மருத்துவ உதவி வேண்டாம் என கூறி மறுத்துவிட்டார். கொள்ளையடிக்க வந்தவர்கள் எதையெல்லாம் திருடி சென்றார்கள் என தெரியவில்லை.

பெர்னார்டு தனது தொடக்க காலத்தில் வீழ்ச்சி கண்ட நிறுவனங்களை வாங்கியுள்ளார். அவர் தனது பங்குகளை அடிடாஸ் விளையாட்டு பொருட்கள் நிறுவனத்திற்கு விற்ற நிலையில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே போலீஸார் இவர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வன்முறை கொள்ளை சம்பவம், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.