
ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 31.10.2021
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்-
ஞாயிறன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடந்தது. இரண்டாவது ஆட்டம் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே துபாயில் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தான்-நமீபியா
பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். ஹசரதுல்லா சசாய் (27 பந்துகளில் 33 ரன்), முகம்மத் ஷாஷாத் (33 பந்துகளில் 45 ரன்) அஸ்கர் ஆப்கன் (23 பந்துகளில் 31 ரன்) முகம்மது நபி (17 பந்துகளில் 32 ரன்) சிறப்பாக ஆடினர். எனவே இருபது ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 160 ரன் எடுத்தது.
பின்னர் ஆட வந்த நமீபிய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே அந்த அணியால் சேர்க்க முடிந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிக்கனமாக பந்து வீசினர். ஹமீத் ஹசன் 4 ஓவர் 9 ரன் 3 விக்கட்; ரஷீத் கான் 4 ஓவர், 14 ரன், 1 விக்கட்; குல்புடின் நயீப் 4 ஓவர், ஒரு மெய்டன், 19 ரன், 2 விக்கட்; நவீன் உல் ஹக் 4 ஓவர், 26 ரன் மூன்று விக்கட் எடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி நமீபியா அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியா- நியூசிலாந்து
இன்றைய தொல்விக்குப் பின்னர் அரையிறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு குறைவாகவே உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கட்டாய வெற்றியடைய வேண்டிய ஒரு நிலையில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே இருந்தன.
பூவாதலையா வென்ற நியூசிலாந்து இந்தியாவை முதலில் மட்டையாடச் சொன்னது. விநோதமாக ரோஹித் ஷர்மாவிற்குப் பதிலாக இஷான் கிஷனை தொடக்க வீரராக கோலி அனுப்பினார். ஆனால் இஷான் கிஷன் விரைவாக ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக இறங்கிய ரோஹித் முதல் பந்திலேயே அவுட்டாகியிருக்கவேண்டும். ஆனால் தப்பித்துக்கொண்டார். அவர் எட்டாவது ஓவர் வரை ஆடினார். அவர் சந்தித்த 14 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு ஃபோருடன் அவரால் 14 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிக ரன் எடுத்தது ரவீந்தர் ஜதேஜா (26) மட்டுமே. கிட்டதட்ட தொடர்ச்சியாக 11 ஓவர்களுக்கு இந்திய அணி வீரர்களால் ஒரு ஃபோரோ அல்லது சிக்சரோ அடிக்க முடியவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பாக பந்து வீசினார்கள். கடைசியில் இருபது ஓவர்களுக்கு ஏழு விக்கட் இழப்பிற்கு இந்திய அணி 110 ரன் எடுத்தது.
இந்த எளிமையான ஸ்கோரை நியூசிலாந்து அணி 14.3 ஓவரில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 111 ரன் எடுத்து எட்டியது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய எந்தத் தூறையிலும் இந்திய அணி சோபிக்கவில்லை. வருண் சக்ரவர்த்தி பந்துவீசும்போது கோலி ரன் சேவிங் ஃபீல்ட் அமைக்கிறார். 110 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் சேவிங் ஃபீல்ட் எதற்கு என்று புரியவில்லை.
அநேகமாக இந்திய அணி இந்த சுற்றொடு நாடு திரும்ப வேண்டியதுதான். மிகச்சிறந்த வீரர்கள், சரியான சமயத்தில் சிறப்பாக ஆடவில்லை. நாளை இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையேயான குரூப் 1 பிரிவு பொட்டி நடக்கிறது.