
ஐ.சி.சி. டி20 போட்டிகள் – 01.11.2021
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஷார்ஜாவில் திங்களன்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்தப் போட்டியில் இங்கிலாந்து நான்கு ஆட்டங்கள் ஆடி நான்கிலும் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட குரூப் 1 பிரிவிலிருந்து தகுதி பெற்றுவிட்டது.
இங்கிலாந்து அணியின் தலைவர் முதல் முறையாக பூவாதலையாவில் வெற்றிபெறவில்லை. இலங்கை அணி டாஸ் வென்று இங்கிலாந்து அணியை மட்டையாடச் சொன்னது. முதல் ஆறு ஓவரில், அதாவது பவர்ப்ளேயில் இங்கிலாந்து மூன்று விக்கட்டுகள் இழந்து 36 ரன் எடுத்தது. முதல் பத்து ஓவரில் 47 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா டி சில்வா இரண்டு விக்கட்டுகள் எடுத்தார்.
ஆனால் அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடினார். அவர் முதல் 50 ரன்கள் அடிக்க 45 பந்துகள் எடுத்துக்கொண்டார். அதில் ஒரு ஃபோர், ஒரு சிக்சரும் அடக்கம். அடுத்த 22 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து மொத்தம் 101 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து ஃபோர்களும், ஐந்து சிக்சர்களும் அடக்கம். கடைசி பந்தில் 95 ரன்னிலிருந்து 101 ரன்னுக்கு போக ஒரு சிக்சர் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி இருபது ஓவர் முடிவில் நாலு விக்கட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாட வந்த இலங்கை அணியின் தொடக்கமும் மோசமாக அமைந்தது. முதல் ஆறு ஓவரில் அந்த அணி 40 ரன் எடுத்தது. தொடக்க வீரர் பதும் நிசாங்கா மூன்றாவது பந்தில் ரன்அவுட்டானார்.
பத்தாவது ஓவர் முடிவில் இலங்கை அணி இங்கிலாந்து அணியைவிட நல்ல ஸ்கோரில் இருந்தது. (66/4). ஆனால் இலங்கை வீரர்களால் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை. இங்கிலாந்து அணியின் எல்லா பந்துவீச்சாளர்களும் விக்கட் எடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 19 ஓவரில் எல்லா விக்கட்டையும் இழந்து 137 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது.
நாளை இரண்டு ஆட்டங்கள். முதல் ஆட்டம் வங்கதேசம் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில், இரண்டாவது ஆட்டம் நமீபியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில்.