சர்வதேச நெருக்கடிக்கு பணிந்தது பாகிஸ்தான்: ஹபீஸ் சயீத் பயங்கரவாதியாக அறிவிப்பு

சயீத்தின் ஜமாத் - உத் - தவா அமைப்பின் தலைமையகத்துக்கு வெளியே பாதுகாப்பு என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானில் செயல்படும்

இஸ்லாமாபாத்:
அமெரிக்கா, ஐ.நா., சபை உட்பட சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட நெருக்கடிக்குப் பணிந்த பாகிஸ்தான், மும்பை தாக்குதலுக்கு காரணகர்த்தாவாக இருந்த ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது . ஐ.நா.,வின் பயங்கரவாத பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதியாக அறிவிக்கும் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டார்.

ஐ.நா. சபையில் அமெரிக்கா மற்றும் இந்தியா கொடுத்த அழுத்தங்களைத் தொடர்ந்து, லஷ்கர் – இ – தொய்பா, ஜமாத் – உத் – தவான் உள்ளிட்ட ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட 27 அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அதிபர் தடை விதித்து கையெழுத்திட்டுள்ளார்.

மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜமாத் – உத் – தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் காரணகர்த்தாவாக இருந்தார். இவரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.,சபையும் அமெரிக்காவும் அறிவித்த நிலையில், பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிய அவர், அரசியல் கட்சி துவக்கி வரும் தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் ஐ.நா.,வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தானில் தடை செய்யும் அவசர சட்டத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டுள்ளார். இந்தப் பட்டியலில் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது ஜமாத் – உத் – தவா அமைப்பும் மற்றும் சில பயங்கரவாதிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டத்தின்படி, பட்டியலில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களது அலுவலகங்கள், மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கவும் முடியும்.

மேலும், சயீத்தின் ஜமாத் – உத் – தவா அமைப்பின் தலைமையகத்துக்கு வெளியே பாதுகாப்பு என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களின் அலுவலகங்கள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் அகற்றி, அவற்றுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் அரசினால் விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன. இதனை காவல்துறை உறுதி செய்துள்ளது.