உச்சபட்ச பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு! ‘ஓரளவு’ பணக்கார முதல்வர் மாணிக் சர்க்கார்!

இந்தப் பட்டியலில் ரூ.26 லட்சம் என்ற குறைவான சொத்து மதிப்புகளுடன் திரிபுராவைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் திகழ்கிறார். அவருக்கு ஓர் இடம் முன்பாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

புது தில்லி:
நாட்டின் உச்ச பட்ச பணக்கார முதல்வராகவும், அதிக சொத்துகள் கொண்ட முதல்வராகவும் முதலிடத்தில் உள்ளார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. சொத்துப் பட்டியலில் கடைசி இடம் பிடித்து, ஓரளவு பணக்கார முதல்வராக திரிபுராவின் முதல்வர் மாணிக் சர்க்கார் திகழ்கிறார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு. இந்த அமைப்பு அண்மையில் பல்வேறு மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியது. அதில்தான் இந்த சுவாரஸ்யமான விவரங்கள் தெரியவந்துள்ளன.

இந்த ஆய்வு முடிவுகளின் படி, நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள மாநில முதல்வர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.177 கோடி. அவரைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.129 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் ரூ.48 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தப் பட்டியலில் ரூ.26 லட்சம் என்ற குறைவான சொத்து மதிப்புகளுடன் திரிபுராவைச் சேர்ந்த மாணிக் சர்க்கார் திகழ்கிறார். அவருக்கு ஓர் இடம் முன்பாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரூ.30 லட்சம் சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும் ஜம்மு – காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி ரூ. 55 லட்சம் சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.7.8 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.