சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு சலுகை காட்டும் ஒபாமாவின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

Published:

obama ஹூஸ்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் சுமார் 47 லட்சம் பேருக்கு சலுகை வழங்கும் விதமாக அதிபர் ஒபாமா பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள சுமார் 4.5 லட்சம் இந்தியர்கள் உள்பட ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் நிலை உருவானது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா, சட்ட விரோதமாகக் குடியேறியவர்களில் 47 லட்சம் பேருக்கு சலுகை காட்டும் விதமாக, சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கி கடந்த நவம்பர் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் ஒபாமாவின் உத்தரவு அமெரிக்க நாடாளுமன்றத்தின் விருப்பத்துக்கு மாறாக அமைந்ததும், பழமைவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுமாக அமைந்தது. இந்நிலையில் ஒபாமாவின் உத்தரவை எதிர்த்து அமெரிக்காவில் 26 மாகாணங்கள் ஒன்று திரண்டு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. ‘அமெரிக்க அதிபரின் உத்தரவானது, அரசியல் சட்டம் அவருக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை மீறிய செயல்; அமெரிக்க அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பிரிவு மீறப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் நாட்டில் சட்டம் – ஒழுங்கை அமல்படுத்துவதற்கும், சுகாதாரம், கல்வி திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். எனவே அதிபரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மாகாணங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அதிபர் ஒபாமாவின் உத்தரவை நிறைவேற்றுவதை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கூறி நீதிபதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Related articles

Recent articles

spot_img