துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை மூன்று முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தற்போது நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2500ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
துருக்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ஒரே நாளில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முறையே 7.8, 7.5, 6.0 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சுற்றியுள்ள ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 1939ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்றும் அவர் குறிப்பிட்டார். மோப்ப நாய் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடி மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்குத் தேவையான கருவிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரிய மக்களுக்கான இந்தியா உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த பெருந்துயரத்திலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.