
ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கட் தொடர் 2023
-முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை, புதன்கிழமை தொடங்குகிறது. 1984 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொடர் நடைபெற்ற வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிய கோப்பை என்பது ஆடவர் சில ஆண்டுகளில் ஒரு நாள் சர்வதேச (50 ஓவர்கள்) போட்டியாகவும் சில ஆண்டுகளில் டி-20 சர்வதேச கிரிக்கெட் (20 ஓவர்கள்) போட்டியாகவும் நடத்தப்படுகிறது. ஆசிய நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 1983இல் நிறுவப்பட்டது. இது முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரே கான்டினென்டல் சாம்பியன்ஷிப் ஆகும், மேலும் வெற்றி பெறும் அணி ஆசியாவின் சாம்பியனாகிறது. இது ODI மற்றும் T20I வடிவங்களுக்கு இடையே ஒவ்வொரு 2 வருடங்களுக்கும் மாறி மாறி வருகிறது.
முதல் ஆசியக் கோப்பை 1984 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவில் நடைபெற்றது. அச்சமயத்தில் அங்கு கவுன்சிலின் அலுவலகங்கள் (1995 வரை) இருந்தன. 1986ஆம் ஆண்டு இலங்கையுடனான கிரிக்கெட் உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்தியா போட்டியை புறக்கணித்தது. 1990-91 போட்டிகளை இந்தியாவுடனான அரசியல் உறவில் விரிசல் காரணமாக பாகிஸ்தான் புறக்கணித்தது.
இதே போன்ற காரணத்திற்காக 1993 போட்டி ரத்து செய்யப்பட்டது. 2009 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படும் என்று ACC அறிவித்தது. ஆசிய கோப்பையில் விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் அதிகாரப்பூர்வ ஒருநாள் அந்தஸ்து உண்டு என ஐசிசி முடிவு செய்துள்ளது.
2015இல் ICC, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரத்தைக் குறைத்த பிறகு, 2016 முதல் ஆசிய கோப்பை போட்டிகள் வரவிருக்கும் உலக நிகழ்வுகளின் வடிவத்தின் அடிப்படையில் ஒரு நாள் சர்வதேச மற்றும் டி-20 சர்வதேச வடிவங்களுக்கு இடையில் சுழற்சி அடிப்படையில் விளையாடப்படும் என்று ICC அறிவித்தது. இதன் விளைவாக, 2016 நிகழ்வு டி20 வடிவத்தில் விளையாடிய முதல் நிகழ்வாகும், மேலும் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டிக்கு முன்னதாக ஆயத்தப் போட்டியாக இது செயல்பட்டது.
இந்தியா, ஏழு பட்டங்களுடன் (ஆறு ஒருநாள் மற்றும் ஒரு டி20) போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாகும். இலங்கை அணி 6 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் இரண்டு பட்டங்களை வென்றுள்ளது. இலங்கை அதிக ஆசியக் கோப்பைகளை (15) விளையாடியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் தலா 14 விளையாடியுள்ளன.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 1986ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது 1988ஆம் ஆண்டு இலங்கையை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து 1990 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளிலும் இந்திய அணி ஆசிய கோப்பையை ஹாட்ரிக் முறையில் கைப்பற்றியது. 1997ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கை அணியும் 2000 ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதன் பிறகு 2004ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கையும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் இலங்கை அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரை இந்தியா வென்றது.
இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியும் 2014ஆம் ஆண்டு இலங்கை அணியும் 2016 மற்றும் 2018ஆம் ஆண்டு இந்தியாவும் ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதனை அடுத்து கடைசியாக நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த முறை ஆசிய கோப்பைப் போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடக்க உள்ளது. ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இவை குரூப் A, குரூப் B என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் A பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன. குரூப் B பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன.
முதல் ஆட்டம் பாகிஸ்தானுக்கும் நேபாளத்திற்கும் இடையே நாளை மதியம் பகலிரவு ஆட்டமாகத் தொடங்குகிறது. இரு பிரிவுகளிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 பிரிவுக்கு முன்னேறும். இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதியாட்டத்தில் விளையாடும். இறுதியாட்டம் கொழும்பு நகரில் பிரமேதாசா மைதானத்தில் நடைபெறும்.