
ஆசிய அண்டை நாட்டிலிருந்து வரும் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக, சில பிரபலமான சுற்றுலாத் தலங்களில், சீன காவல்துறையினரை ஈடுபடுத்தும் திட்டத்தை தாய்லாந்து ஆலோசித்து வருகிறது. ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
கோவிட் தொற்றுப் பரவலுக்கு முன்னர் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கொண்டிருந்தது தாய்லாந்து. ஆனால் கோவிட் பரவலுக்குப் பின், நாட்டின் மிக முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலா வருமானம் பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில், சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் ஒரு வழியாக, சீன போலீஸுடனான ஒத்துழைப்பு குறித்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், மூத்த காவல்துறை மற்றும் சுற்றுலா அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விவாதித்தார்.
தாய்லாந்தின் சுற்றுலா ஆணையத்தின் ஆளுநர் தபானி கியாட்பைபூல் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீன காவல்துறையை தாய்லாந்திற்கு கொண்டு வருவதற்கான ரோந்து திட்டம் குறித்து சீன தூதரகத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
“தாய்லாந்து எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளது என்பதை இது காண்பிக்கும். இது சீன சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான பெரும் ஊக்கமாக இருக்கும். இதேபோன்ற திட்டம் கடந்த காலத்தில் இத்தாலியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது” என்று தபானி கூறினார்.
ஸ்பெயினைத் தளமாகக் கொண்ட மனித உரிமைக் குழுவான சேஃப்கார்ட் டிஃபண்டர்ஸ் அறிக்கைகளின்படி, அதிக எண்ணிக்கையிலான இரகசிய சீன காவல் நிலையங்கள் என்று அழைக்கப்படுபவை இந்த ஐரோப்பிய நாட்டில் தான் உள்ளது என்றும், 53 வெளிநாடுகளில் குறைந்தபட்சம் 102 இது போன்ற சீனாவின் ரகசியக் காவல் நிலையங்களைக் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளது.
ஆனால், தாய்லாந்தின் இந்த திட்டத்தை, அந்நாட்டின் இணைய பயனர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக சாடியுள்ளனர். பெரும்பாலானவர்கள், வெளிநாடுகளில் உள்ள சீன எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து இரகசிய நடவடிக்கைகளுக்கு மற்றொரு இடமாக தாய்லாந்து மாறும் என்று கவலைகளைத் தெரிவித்தனர்.
ஆனால், இந்த சர்ச்சைக்கு பதிலளித்த தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே, தாய்லாந்தில் செயல்படும் சீன மாஃபியா குழுக்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் இது என்றும், தாய்லாந்தின் சுதந்திரம் அல்லது இறையாண்மையுடன் எந்தத் தொடர்பும் இதில் இல்லை என்றும் கூறினார்.
“சீன மாஃபியா குழுக்கள் தங்கள் நாட்டின் சொந்த காவல்துறையைப் பற்றி அச்சம் கொள்கிறார்கள். மேலும் சீன சுற்றுலாப் பயணிகள், தங்களை பாதுகாப்பாக கவனித்துக்கொள்வதற்காக சீன காவல்துறையினர் இருக்கும் போது பாதுகாப்பாக உணருவார்கள்” என்றார் சாய்.
உள்ளூர் சுற்றுலாத் துறையை மீட்டு எடுப்பதற்கான ஒரு திட்டமாகவும் அதன் முக்கியமான அம்சமாகவும் இது அரசால் கூறப் படுகிறது. சீன சுற்றுலாப் பயணிகள் தங்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை பகிர்ந்து கொண்டதாலும், பாதுகாப்பற்ற சூழல் பயணிகளைத் தடுத்துள்ளதாலும், சீன பயணிகளைக் கவரும் வகையில் தாய்லாந்தின் அண்மைக் காலத்திய முயற்சியே சீன காவல்துறையினரை பணி அமர்த்தல் எனும் திட்டம். ஆனால் இது கொண்ட நோக்கத்தை விட்டு, வேறு திசையில் சென்றுவிடும் பேரபாயம் இருக்கிறது என்பதையே அந்நாட்டின் இணையதள பயனர்கள் காரசாரமாக அறிவுரையாகக் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு இதுவரை சீனப் பயணிகளின் வருகை மொத்தம் 2.8 மில்லியனாக உள்ளது. ஆனால் அரசாங்கத்தின் முழு ஆண்டு இலக்கான 4 மில்லியனிலிருந்து 4.4 மில்லியன் என்ற அளவு எட்ட முடியவில்லை என்பதால், இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, செப்டம்பரில், தாய்லாந்து நிர்வாகம் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளை ஐந்து மாத காலத்திற்கு தள்ளுபடி செய்தது. இந்த விசா தேவை விலக்கு, இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மே வரை நீட்டிக்கப்பட்டது.