
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ தாக்குதல் நிறுத்தம் மே 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை வரை போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.
பாகிஸ்தானும் இந்தியாவும் வியாழக்கிழமை இன்று பேச்சுவார்த்தை நடத்தி, மே 18 வரை போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டார், இரு நாடுகளின் இராணுவத்தினரும் நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு, போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கான முடிவை எட்டியதாகவும், அதைத் தொடர்ந்து அரசியல் ரீதியான உரையாடலைத் தொடர திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவதில் இராணுவ அளவிலான தகவல் தொடர்பு இதுவரை முக்கியப் பங்கு வகித்து வருவதாகவும், மே 18 க்குப் பிறகு, விரிவான அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் டார் மேலும் கூறினார்.
“இந்தியாவுடன் கூட்டு மற்றும் முடிவு சார்ந்த பேச்சுவார்த்தைகள் இருக்கும். யாருடைய அதிகாரப்போக்கையும் ஏற்றுக்கொள்வது இதன் நோக்கம் அல்ல, மாறாக சமத்துவத்தின் அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான்” என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.
மே 14 அன்று இரு தரப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) இடையேயான ஹாட்லைன் தொடர்பின் போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
“டிஜிஎம்ஓக்களின் உரையாடலின் போது, போர் நிறுத்தம் மே 12 வரை நீட்டிக்கப்பட்டது. மே 12 அன்று டிஜிஎம்ஓக்கள் மீண்டும் பேசியபோது, போர் நிறுத்தம் மே 14 வரை நீட்டிக்கப்பட்டது. மே 14 அன்று நடந்த பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட வழிவகுத்தது,” என்று இஷாக் தர் வியாழக்கிழமை மேல் சபையில் தெரிவித்தார்.
இந்தியாவின் காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காமில் கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால், 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கித் தாக்குதலுக்குப் பின்னர், மே 7 ஆம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா வான்வழித் துல்லியத் தாக்குதல்களை நடத்தியது. அதன் பின்னர் தங்களுடைய நாட்டின் ஓர் அங்கமான பயங்கரவாதிகளின் உயிரிழப்புகளுக்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதலைத் தொடர்ந்ததால், பதட்டங்கள் அதிகரித்தன.
மூன்று நாட்கள் கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர், பாகிஸ்தானில் கடுமையான சேதங்கள் ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தான் தரப்பு கெஞ்சிக் கேட்டுக் கொண்டதை அடுத்து, மே 10 அன்று ஒரு தாக்குதல் நிறுத்தத்திற்கு பாரதம் ஒப்புக்கொண்டது. பின்னர் இந்த இரு தரப்பு தாக்குதல் நிறுத்த நடவடிக்கை கட்டம் கட்டமாக நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மே 18 ஆம் தேதி வரை போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் வியாழக்கிழமை தெரிவித்தார். இரு நாடுகளின் படைகளுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் போது, பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக டார் கூறினார்.





