
பொறையுடைமை என்கிற அதிகாரத்தில், திருவள்ளுவர்,
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்கிறார்.
அதாவது “தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்” என்கிறார் இக்குரலுக்கு விரிவுரை தந்த மு வரதராசனார்.
உலகில் அரசியலை விட மத சகிப்புத்தன்மை அதிகமாகக் காணப்படுகிறது என்பதற்குப் பல சமூக மற்றும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மனிதகுலத்தின் அன்றாட வாழ்க்கையில் மதங்கள் அன்பையும் அமைதியையுமே பெரும்பாலும் போதிக்கின்றன.
மத சகிப்புத்தன்மை உலகில் எவ்வாறு மேலோங்கி இருக்கிறது என்பதைப் பின்வரும் காரணிகள் விளக்குகின்றன:
உலகின் பல நாடுகளில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அண்டை வீட்டாராகவும், நண்பர்களாகவும், சக ஊழியர்களாகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். பண்டிகைகளைப் பகிர்ந்து கொள்வதும், இன்ப துன்பங்களில் துணை நிற்பதும் அரசியலைத் தாண்டிய மனிதாபிமானத்தைக் காட்டுகிறது.
உலகின் அனைத்து முக்கிய மதங்களும் அன்பு, கருணை, மன்னிப்பு மற்றும் பிறருக்கு உதவுதல் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவை மனிதர்களை இணைக்கும் பாலமாகச் செயல்படுகின்றன. பல நேரங்களில் அரசியல் லாபங்களுக்காகவும், அதிகாரத்தைக் கைப்பற்றவுமே மத வேறுபாடுகள் பெரிதுபடுத்தப்படுகின்றன.
சாதாரண மக்களிடையே இயல்பாக இருக்கும் சகிப்புத்தன்மையை சில அரசியல்வாதிகள் பல நேரங்களில் சிதைக்கின்றனர். இயற்கைப் பேரிடர்கள், வறுமை மற்றும் நோய்த் தொற்று காலங்களில் மத வேறுபாடின்றிப் பல மத அமைப்புகளும் தன்னார்வலர்களும் இணைந்து மக்களுக்கு உதவுகின்றனர். சேவா பாரதி அமைப்பு இந்தப் பொதுத்தொண்டுக்கு உதாரணங்களில் ஒன்று.
பண்டைய பாபிலோனிய மன்னன் ஹமுராபி, இவர் கடுமையான சட்டங்களுக்காக அறியப்படுகிறார். அவரது சட்டத் தொகுப்பில் மிகவும் பொதுவானது “கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்”. . அதாவது குற்றத்திற்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது அவரது சட்டத்தின் அசல் நோக்கமாக இருந்தது. அவரது ஆட்சியில் சமய மற்றும் கலாச்சார சகிப்புத்தன்மை, சமூக நீதி மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளித்தார் என்பது பெருமைப்படும் விஷயம்.
.
ஹமுராபி பல நகரங்களைக் கைப்பற்றி ஒரு பெரிய பேரரசை உருவாக்கிய போதிலும், வெற்றி கொள்ளப்பட்ட மக்களின் உள்ளூர் தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் அழிக்கவில்லை. தான் கைப்பற்றிய சுமேரிய மற்றும் அக்காடிய நகரங்களின் கோவில்களைப் புனரமைத்து, அந்த மக்களின் பாரம்பரியச் சடங்குகள் தொடர ஆதரவளித்தார்.
பாபிலோனிய மொழியான அக்காடியனை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தியபோதும், பழமையான சுமேரிய இலக்கியங்களையும் மத மரபுகளையும் பாதுகாத்தார். ஹமுராபியின் சட்டம் எண் 169-ன்படி, ஒரு மகன் தன் தந்தைக்கு எதிராக முதல் முறை குற்றம் இழைத்தால், அவனை உடனடியாகத் தண்டிக்காமல் மன்னிக்க வேண்டும் என்ற சகிப்புத்தன்மை இடம்பெற்றிருந்தது. ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், தகுந்த ஆதாரங்கள் இன்றி அவரைத் தண்டிக்கக் கூடாது என்ற அடிப்படை நீதியை ஹமுராபி நடைமுறைப்படுத்தினார்.
சுருக்கமாகக் கூறினால், அரசியல் என்பது உலக அளவில் அதிகாரத்தையும் பிரிவினையையும் மையமாகக் கொண்டதாக மாறிவிட்ட சூழலில், உண்மையான ஆன்மீகமும் மத நம்பிக்கைகளும் மக்களிடையே சகிப்புத்தன்மையையும் அமைதியையுமே வளர்க்கின்றன.
- ஆர் கே



