அல்ஜீரிய தலைநகர் அருகே 300 பேருடன் பயணித்த ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள். அல்ஜியர்ஸ் தலைநகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள ப்லிடா மாகாணத்தின் பௌபாரிக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது இந்த விபத்தில் 257 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்சில் இருந்து 30கிலோமீட்டர் தொலைவில் போபாரிக் (Boufarik) என்னுமிடத்தில் உள்ள ராணுவத்தளத்தில் இருந்து வீரர்களுடன் ராணுவ விமானம் பெச்சார் என்கிற நகருக்குப் புறப்பட்டது. மேற்கு சஹாராவுக்கு உரிமை கோரும் மொராக்கோவுக்கு எதிரான போராளிகள் குழுவைச் சேர்ந்த சுமார் 30 பேரும் அந்த ராணுவ விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இலியுசின் 76என்கிற அந்த விமானம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து விமானத்தில் தீப்பிடித்து அந்தப் பகுதியே புகை சூழ்ந்து காட்சி அளித்தது.
தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினரும் பாதுகாப்புப் படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த வீரர்கள், விமானிகள் என 257 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.




