ரஷியத் தலைநர் மாஸ்கோவில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் உலக அறிவியல் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டிராஜா எம்பி பங்கேற்க உள்ளார்.
சிறந்த சிந்தனையாளரும், பொருளாதார நிபுணரும், பொதுவுடைமைக் கோட்பாட்டை வகுத்தவருமான காரல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூல் வெளிவந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், 2018 மே 5-ஆம் தேதி அவரது 200-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ரஷிய கம்யூனிஸ்ட் கட்சியும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவும் இணைந்து உலக அறிவியல் மாநாட்டை நடத்துகின்றன. ‘மார்க்ஸின் மூலதனமும் உலக வளர்ச்சியின் மீதான அதன் தாக்கமும்’ எனும் தலைப்பில் மே 11, 12 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இம்மாநாட்டில், உலகளவில் நோபல் பரிசு பெற்றவர்கள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா எம்பி இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார்.



