ஒரு நாள் போட்டி கிரிக்கெட் அரங்கில் 481 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி.
இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இன்று நடைபெற்ற 3வது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன் 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் குவித்ததே அதிக பட்ச ஸ்கோராக இருந்தது. இன்று நடைபெற்ற போட்டியில், தாங்கள் படைத்த சாதனையை தாங்களே முறியடித்துள்ளனர் இங்கிலாந்து அணியினர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பந்து வீசத் தீர்மானித்தது. இதன்படி, களத்தில் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் துவக்கம் முதலே அடித்து விளையாடி ரன் குவித்தனர்.இறுதியில் நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழந்து 481 ரன் குவித்தது இங்கிலாந்து. ஹேல்ஸ் 147 ரன்னும், பெய்ர்ஸ்டோ 139 ரன்னும், மார்கன் 67 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் பெய்ர்ஸ்டோ, ரோய் இருவரும் முதல் 20 ஓவர்களில் 160 ரன்களை சேர்த்தனர். ஓவருக்கு 8 ரன் என்ற விகிதத்தில் ரன் இருந்ததால், தொடர்ந்து வந்த வீரர்களுக்கு அடித்து ஆட வசதியாக அமைந்தது குறிப்பிடத் தக்கது. இதனால் பின்னர் வந்தவர்கள் அடித்து ஆட, ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன் என்ற விகிதத்தில் ரன் ரேட் அமைந்தது! இது ஒரு மிகப் பெரும் சாதனையாகவே கருதப் படுகிறது.




