பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, இன்று இலங்கை செல்ல உள்ளார். இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரில் இவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜெனரல் ஹயட், பாகிஸ்தானின், கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் 17-வது தலைவர் என்பதுடன், பாகிஸ்தான் படைகளில் உள்ள நான்கு நட்சத்திர ஜெனரல்களில் மூத்தவராவார்.
இவர் இலங்கை பயணத்தின் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து, முக்கியமாக, பயிற்சி மற்றும் இராணுவ ஒத்திகைகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



