கிருத யுகம் ஆரம்பித்த போது மீண்டுமொருமுறை பூமியில் குழந்தைகள் பிறக்காத நிலை உருவாயிற்று. சந்தானம் குறைந்ததால் மக்கள் தொகை இல்லாமல் போனது. பூமி மிகப் பெரியது. அனைத்து செல்வங்களும் உள்ளன. ஆனால், அனுபவிப்பதற்கு மக்கள் இல்லை என்ற நிலை உருவாயிற்று. தவத்தின் மூலம் முன்பு நிறைய குழந்தைகள் பிறந்தன. பின் மறைந்தன. மீண்டும் சந்ததி வளரவில்லை.
கர்த்தம முனிவரை பிரம்ம தேவர் மீண்டும் சந்தான உற்பத்தி செய்யுமாறு ஆக்ஞாபித்தார்.
“இந்த பூமி மீது மக்கள் தொகை பெருக வேண்டும்” என்றார்.
அப்போது கர்தமர், ‘நான் முன்பு மக்களை பெற்றேன் அனைத்தையும் பார்த்து விட்டேன். மீண்டும் நான் சம்சாரத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று பிரம்ம தேவர் கூறுகிறார், சரி…!’ என்று எண்ணி தவம் செய்யச் சென்றார். நீண்ட காலம் தவம் செய்தார். தவத்திலிருந்து வெளி வந்த பின் ஸ்ரீஹரியை நினைத்தார்.
தவம் என்பது இறைவனைக் குறித்துத்தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. காரணங்கள் ஏதுமின்றி, நிர்குணமாக தவம் செய்து சமாதி நிலையில் இருந்து வெளிப்பட்ட பிறகு எந்த தேவதையை நினைத்தாலும் அவர்கள் தரிசனமளிப்பர். பாவனை மூலம் தேவதைகளை பிரத்யக்ஷமாக வரவழைக்கும் சக்தி தவத்திற்கு மட்டுமே உள்ள விசேஷமான சிறப்பு.
கர்தம முனிவர் நீண்ட காலம் தவம் செய்தபின் சமாதியிலிருந்து வெளிவந்து ஒரு முறை ஹரியை நினைத்தார் என்பது பொருள்.
இதுபோன்ற செய்திகள் புராணங்களில் சாதாரணமாக காணப் படுகின்றன. ஆனால் அவற்றில் ஒரு விசேஷம் உள்ளது. அதாவது நிர்குணமான ஒரு தேஜஸ்ஸுக்காக தவம் செய்தால் அந்த தேஜஸ், சர்வாந்தர்யாமியாக இருப்பதால் எந்த ரூபம் தேவையோ அந்த ரூபத்தில் தரிசனமளிக்கிறது.
கர்தமர் ஹரியை நினைத்ததால் ஹரி தரிசனமளித்தார். “காலச்சக்கரத்தைச் சுழல வைப்பவர் நீர். இந்த சராசர ஜகமனைத்தும் உன் மாயையால் பிறக்கிறது, நசிக்கிறது” என்று துதித்தார் கர்தம முனிவர்.
அவரிடம் ஸ்ரீஹரி, “எந்த கோரிக்கையோடு நீர் தவத்தில் என்னை நினைத்தீர்? உங்கள் விருப்பம் என்னிடம் வெளியிடப்படாவிடினும் சித்தியாகட்டும்!” என்று அருளினார்.
மேலும், “பிரம்மா உமக்கு இட்ட பணியை என்னிடம் வெளியிடாமல் என்னைக் குறித்து தவம் செய்தீர். பிரம்மா உமக்கிட்ட காரியம் உம் மூலம் நிறைவேறுமாக!” என்றார்.
அதோடு கூட, “பிரம்ம புத்திரர், சாம்ராட் ஆன ஸ்வாயம்புவ மனு, ‘பிரம்ம வர்த்த’ தேசத்தை ஆண்டு வருகிறார். அந்த ஸ்வாயம்புவ மனு உன்னிடம் வந்து தன் மகளை உமக்கு அளிப்பார். அவளை விவாகம் செய்து கொண்டு ஒன்பது புதல்விகளை நீர் பெறுவீர். அப்பெண்களுக்கு திருமணமாகி உமக்கு முனிவர்களும், யோகிகளும், தவசிகளும் பேரன்களாகப் பிறப்பார்கள். இது ஒரு பந்தம் என்று துக்கம் கொள்ளாதீர். இந்த சம்சாரம் பிரம்மாவின் ஆணையின்படியும் என் விருப்பத்தின் பேரிலும் தான் நடக்கிறது. நீர் உமக்கிட்ட காரியத்தில் இறங்குவீராக. உம் செயலனைத்தும் என்னிடத்திலேயே நிகழ்கிறது. உம் செயல்கனைத்தையும் என்னிடம் சமர்ப்பண புத்தியோடு அர்ப்பணிப்பீராக! ‘பந்தத்திற்கு காரணமானேன்!’ என்றெண்ணி வருந்த வேண்டாம். கர்மாவைச் செய்கையில் பந்தம் ஏற்படுகிறது. ஆனால் அதனை எனக்கு அர்ப்பணிப்பதன் மூலம் தங்களுக்கு துக்க நிவாரணம் ஏற்படுகிறது. அதன் பின் நானே உமக்கு புதல்வனாகப் பிறப்பேன்” என்றருளினார் ஸ்ரீ ஹரி.
(‘பிரம்ம வர்த்த தேசம்’ என்றால் தற்போதைய பர்மா என்று தெரிகிறது. பிரம்மாவின் பெயரே ‘பர்மா’ என்று ஆயிற்றென்று Vedic Geography தெரிவிக்கிறது. தற்போதைய பர்மா அப்போது மிகப் பெரியதாக இருந்திருக்கலாம். இப்போது பூமி எவ்வாறு உள்ளதோ அதே போல்தான் முன்பும் இருந்ததென்று கூறுவதற்கில்லை. மிகவும் பெரியதாக இருந்ததென்றே எண்ண வேண்டும். அவ்விதம் இந்த பிரம்மவர்த்த தேசம் கூட மிகப் பெரியதாக இருந்ததென்று கூறப்படுகிறது. இன்னும் தெற்காகச் சென்றால் சின்னச் சின்ன தீவுகள் ஆயிரம் உள்ளன; லட்சம் உள்ளன. இவையனைத்தும் ஒரு காலத்தில் பெரிய பூமி பாகம். சமுத்திரம் அதன் மேல் பிரவேசித்ததால் சின்னச் சின்னத் துண்டுகளாக கடலின் மேல் அங்கங்கே சிறிது வெளிப்படுகின்றன. இவையனைத்தும் அமுங்கிப் போன பூமி பாகங்களே. இன்னும் சிறிது தூரம் சென்றால் இன்றைய ஆஸ்திரேலியா வரை இருந்தது அந்த Land Mass. (சரஸ்வதி -திருஷ்தவதி என்ற தெய்வீக நதிகளின் இடையில் உள்ள தேசம் பிரம்ம வர்த்தம் என்று மற்றொரு புராணம் கூறுகிறது. அது நான்கு துண்டுகளாக உள்ளதாக ஒரு கருத்து உள்ளது. மொத்தம் ஏழு தீவுகள். ‘சப்தத்வீபா வசுந்தரா’ என்று கூறப்படுகிறதல்லவா! பரத வர்ஷத்தில் உள்ளது பரத கண்டம். ஒருவேளை பரத வர்ஷம் என்பதில்தான் இந்த பிரம்மவர்த்த தேசமும் இருந்தது போலும்!)
ஸ்ரீ ஹரியின் ஆக்ஞைப்படி கர்தமர் நடந்து கொண்டார். ஸ்வாயம்புவ மனு தன் மனைவி சதரூபா மற்றும் மகள் தேவஹூதியோடு வந்து கர்த்தமரிடம், “என் மகளான தேவஹூதி உன் வரலாறு அறிந்து உன்னைத் தவிர வேறு யாரையும் விவாகம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிரதிக்ஞை செய்துள்ளாள். இதற்கு தெய்வ சங்கல்பம் காரணமாக இருக்க வேண்டும். எனவே நீ இவளை திருமணம் செய்து கொள்” என்றார்.
ஆனால் கர்த்தமருக்கு திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை. ஆனால், ஆணைப்படி நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர் ஸ்வாயம்புவ மனுவிடம், “நல்லது. உம் மகளை நான் மணக்கிறேன். குழந்தைகள் பிறந்ததும் சென்று விடுவேன். உம்முடைய மகளைக் கேளுங்கள். இதற்கு சம்மதித்தால் திருமணம் புரிந்து கொள்வேன்” என்றார்.
அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். தேவஹூதிக்கும் கர்த்தமருக்கும் விவாகம் நடந்தேறியது. தாயான சதரூபா, தேவஹூதிக்கு பலவித உபதேசங்கள் செய்தாள். பின் பெற்றோர் திரும்பிச் சென்றனர்.
விவாக வாழ்க்கையில் கர்தமர் தேவஹூதியை சோதனை செய்தார். அவர் எப்போதும் உதாசீனமாக இருந்தார். அவளை ஏற்றுக் கொண்டாற்போலும் அல்ல; ஏற்றுக் கொள்ளாமலும் இல்லை. ஆனால் அவள் எப்போதும் அவருடைய சேவையிலேயே காலம் கழித்தாள். கடைசியில் உணவு கூட உண்ணாமல் இருந்து விட்டாள். உடல் இளைத்துத் துரும்பானது. உடலில் சக்தி குறைந்து போனாலும் அவருக்குச் செய்யும் சேவையில் அவள் குறை வைக்கவில்லை.
அது வரை அவளை பரிசோதித்த கர்தமர் அவளிடம், “தவம் போல் நீ எனக்குச் சேவை செய்துள்ளாய். இதற்கான பலனை நீ பெறுவாய். ஏதாவது கோரிக்கையிருந்தால் வெளிப்படுத்து. நீ அனைத்து போகங்களும் கிடைக்கப் பெறுவாய். சுகமாக இரு!” என்று உரைத்து மனைவியை ஆசீர்வதித்தார்.
அவள் அவருக்குச் சேவை செய்த காலத்தில் இருவருக்குமே உணவோ உறக்கமோ இருக்கவில்லை. இருவருமே இளைத்துத் துரும்பாயிருந்தனர். அவருடைய ஆசீர்வாத பலத்தால் அவள் அநேக செல்வங்களும், ஆரோக்கியமும், பலமும், யௌவனமும் வர பெற்றாள். ஒரு திவ்ய விமானத்தையும் அநேக திவ்ய மாளிகைகளையும் சிருஷ்டி செய்தார் கர்தமர்.
பின்னர், “இவையனைத்தும் உனக்காகவே!” என்றார்.
அவள், “எனக்கு எதுவுமே தென்படவில்லையே!” என்றாள். அதாவது அவள் தவம் செய்த கால கட்டத்தில் பௌதீகமான ஜட பதார்த்த பாவனையை இழந்து விட்டாள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தன் மனைவி எத்தகைய சிறந்த தவம் செய்துள்ளாள் என்பதை அவர் கிரகித்தார். அவளுக்கு பூவுலக சிருஷ்டியே கண்ணில் படவில்லை. அவளுக்காக தான் சிருஷ்டித்தவை அனைத்தும் மாயையின் பிரபாவத்தால் நடந்தேறியவையாகவே அவளுக்குத் தென்பட்டன. அப்போது அவர், சமீபத்தில் இருந்த பிந்து சரோவரத்தில் அவளை ஸ்நானம் செய்துவிட்டு வரச் சொன்னார். அவள் அதில் முழுகி வெளிவந்த போது நூற்றுக் கணக்கான சேவகர்கள் சேவை செய்து கொண்டிருப்பதையும், தனக்குக் கிடைத்த ஐஸ்வர்யமும் கண்ணில் பட்டன. இருவரும் சேர்ந்து தேவ விமானத்தின் மீதேறி அனைத்து உலகங்களையும் சுற்றி வந்தனர். நூறாண்டுகள் இவ்வாறு சுகமாகக் கழிந்தன.
பின்னர் ஸ்ரீ ஹரியின் ஆக்ஞைப்படி அவளுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தன. தன் முந்தைய ஷரத்தின்படி கர்தமர் சந்தான உற்பத்தி ஆனவுடன் சந்நியாசம் பெற்றுக் கிளம்ப எண்ணினார்.
“ஸ்வாமி! நீங்கள் சென்று விட்டால் இப்பெண்களுக்கு யார் திருமணம் செய்விப்பார்கள்?” என்று கேட்டாள் மனைவி.
எனவே அப்போதைக்கு துறவு பூணும் உத்தேசத்தைக் கைவிட்டார் கர்தமர். அதன் பின் சிறிது காலம் கழித்து அவள் மீண்டும் கருவுற்றாள். ஆண் மகவு பிறந்தது. அந்தக் குழந்தைதான் ஸ்ரீஹரியின் அவதாரமான கபிலர். ஹரி வம்சத்தில் விஷ்ணுவின் அம்சத்தோடு பிறந்தவர் கபிலர். பிரம்மா கூறியபடியே அனைத்தும் நடந்தன.
அதன் பின் தன் ஒன்பது புதல்விகளுக்கும் திருமணம் செய்வித்தார் கர்தமர். மரீசி மகரிஷிக்கு கலா, அத்ரி மகரிஷிக்கு அனுசூயா, அங்கீரசருக்கு ஷ்ரத்தா, புலஸ்தியருக்கு ஹவிர்புவு, புலஹருக்கு கதி, க்ருதுவுக்கு க்ரியா, பிருகுவுக்கு க்யாதி, வசிஷ்டருக்கு அருந்ததி, அதர்வருக்கு சாந்தி – இவர்களை திருமணம் செய்வித்து கணவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்.
சிறிது காலம் கழித்து, தான் இன்னும் சிரஞ்சீவியாக அப்படியே இருந்தால் இந்த சம்சாரம் மீண்டும் பூரணமாகி பிரம்மா மறுபடியும் தன்னை சந்தான உற்பத்தி செய்யும்படி கூறுவார் என்று சந்தேகம் கொண்டார் கர்தமர். முக்தியைப் பெற வேண்டுமே தவிர தான் இந்த சிருஷ்டியில் எங்குமே வசிக்கக் கூடாது என்றெண்ணினார்.
கர்தமர் பிரஜாபதியாக உள்ளார். மகா தபஸ்வி. ஆயினும் பிரம்மா பிரவிருத்தி மார்க்கத்தையே தனக்கு உபதேசித்துள்ளார். அவரை வழிபட்டுப் பலனில்லை. விஷ்ணு தன்னை பிரம்மாவின் கூற்றுப்படி நடக்குமாறு பணிக்கிறார். எனவே விஷ்ணுவே தன் புதல்வனாகப் பிறந்துள்ளதால், அவரிடமே சென்று ஐயந்தெளிய நினைத்தார்.
ஒரு நாள் ஏகாந்தமாக தன் குமாரனான கபிலரின் அருகில் சென்று வணங்கி, “நீ சாட்சாத் விஷ்ணுவே! எனக்கு மோட்ச உபதேசம் செய்வாயாக! உன் பிறப்பால் நான் ருண விமோசனம் பெற்றவனானேன்” என்றார். கபிலர் அவருக்கு சகல தத்துவங்களையும் உபதேசம் செய்தார்.
அதற்கு முன்பே கர்தமர் பரம வைராக்கியசாலியாக இருந்ததாலும், பூர்வ தவத்தின் மகிமையால் புலனடக்கம் கைவர பெற்றவராதலாலும் அவருக்கு கபிலர் இவ்விதம் போதித்தார், “சாங்கியரே! யோக மார்கங்களைக் கூறுகிறேன். கேளுங்கள். நான் கூறும் இந்த மார்க்கம் மிகக் கடினமானது. இம்மார்க்கத்தில் உமக்கு விஷ்ணு தர்சனம், பிரம்ம தரிசனம் போன்ற பந்தத்திற்கு காரணமானவைகள் எதுவும் குறுக்கே வரமாட்டா. பரஞ்சோதியாக என்னைக் காண்பீராக!” என்றார்.
எதனால் என்றால், எத்தனை காலம் சகுணமான சொரூபம் தரிசனமளிக்கிறதோ, நம் தவத்திற்கு பலனாக நம்முள் இருக்கும் வ்ருத்தி அவ்விதம் தோற்றமளிக்கிறதே தவிர நம்மிடம் இல்லாதது தரிசனமளிக்காது.
அத்தனை யோகங்களிலும் உள்ள ஒரு ரகசியம் என்ன வென்றால், நாம் பெரும் தரிசனங்களுக்குக் காரணம், பீஜம், சம்ஸ்கார வடிவில், கோரிக்கையின் வடிவில் நம்மிடம், நம்முள்ளேயே இருக்கிறது. அதுவே வெளியில் வந்து ஒரு சொரூப தரிசனத்தை அதாவது ஒரு உருவத்தைக் கற்பித்துக் கொண்டு தரிசனமளிக்கிறது. நாம் செய்யும் தவம் நம்மிடமிருந்து உற்பத்தியாகும் உருவத்தையே தரிசிக்கச் செய்கிறது. நாம் விரும்பும் ஆசைகளும் நம்முடையவே. அதன் பலனை அனுபவிப்பதும் நாமே. உள்ளே பரமதத்துவம் மட்டும் அப்படியே உள்ளது. அது எதற்கும் காரணமாவதில்லை. அது ஸ்திரமாக இருக்கும் வஸ்து.
அவ்வாறு கபிலரிடமிருந்து கர்தமர் உபதேசம் பெற்ற பின், அவருக்குப் பிரதக்ஷிணம் செய்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். புதல்வனின் ரூபத்தில் இருக்கும் ஹரியை வணங்கினார் என்றால், ஸ்ரீஹரி சாட்சாத் ஸ்ரீஹரியாகவே தரிசனமளித்தார் என்று பொருள். அவர் போதித்த விதமாகவே வெளிப்பட்டாராதலால் இங்கு முக்தி மார்கத்தைக் காண்பித்தருளினார் என்று பொருள்.
எனவே இறைவனை முக்தி மார்கத்திற்காக சரணடைந்தால் அவரே குருவாக வருவார். கோரிக்கைகளை தீர்த்துக் கொள்வதற்காக சரணடைந்தால் புராணங்களில் கூறியுள்ள உருவங்களிலேயே தரிசனமளித்து கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பார். ஆனால் அவையனைத்தும் பந்தத்துக்குக் காரணமாகுமே தவிர முக்தி மார்கமாகாது. முக்தியைக் கோரினால்தான் பகவான் குரு உருவில் வருவார் என்பது இதன் தாத்பர்யம்.
அதன் பின் கர்தமர் உலகனைத்தையும் வாசுதேவ மயமாக, பரஞ்சோதி மயமாகக் கண்டார். இறுதியில் கர்தமர் முக்தி பெற்றார். அதாவது அவர் இதர முனிவர்களை போலன்றி எந்த உலகிலும் இல்லாமல் இறைவனோடு ஐக்கியமடைந்தார் என்று கூறுவர்.
சத்குரு ஸ்ரீ சிவானந்தமூர்த்தி அவர்கள் தெலுங்கில் எழுதிய ‘மார்கதரிசிகள் மகரிஷிகள்” பாகம் 1-லிருந்து.
-தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்



