இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 82 பேர் இறந்துள்ளது தெரிய வருகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் ஆழம் மிக தீவிரமாக இல்லை. பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மட்டுமே இது ஏற்பட்டுள்ளது.
கடற்கரைகள் மற்றும் மலையேற்ற பாதைகளுக்கு பிரசித்திபெற்ற சுற்றுலாதளமான லோம்போக் தீவில் கடந்த வாரம் 16 பேர் உயிரிழக்க காரணமான நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களில் இந்த எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது.
சேதமடைந்த பெரும்பாலான கட்டடங்கள் தரம்குறைந்த மற்றும் வலுவில்லாத கட்டுமான பொருட்களால் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.