இந்தியாவுக்கு எதிராக யாரும் அறிக்கைகள் வெளியிட வேண்டாம்: பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கு எதிராக எந்த அறிக்கைகளையும் வெளியிட வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு வெளியிட்டால் அது இரு நாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ் ‘த நேஷன்’ வெளியிட்டுள்ள செய்தியில்…

இந்தியா பாகிஸ்தான் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் பேச வேண்டும் என்று தில்லியில் இருந்து சில தலைவர்கள் அறிக்கைகள் விடுவதால், எரிச்சல் அடைந்துள்ளார் நவாஸ் ஷெரீப். இருப்பினும் இந்திய அரசின் கொள்கை அது இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார்.

அண்மையில் பாரீஸில் நடைபெற்ற பருவ நிலை உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி-நவாஸ் ஷெரீப் சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். வரும் ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலகப் பொருளாதார மன்ற மாநாட்டின் போது நரேந்திர மோடி- நவாஸ் ஷெரீப் ஆகியோர் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்.
-இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.