சவுதி மருத்துவமனையில் பயங்கர தீ: 25 நோயாளிகள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

ரியாத்:

சவுதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வரும் மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் குழந்தைகள்.

சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜிஸான் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையின் முதல்தளத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தளத்தில்தான் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள் இயங்கி வந்தன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 25 பேர் தீயில் சிக்கி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை.