இலங்கையில் அரசியல் குழப்பம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. சுதந்திர கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார் ராஜபட்ச. இதனால் அதிபர் சிறீசேனவுக்கு பின்னடைவு என்று கருதப் படுகிறது. மீண்டும் அதிபர் பதவிக்கு வரும் ராஜபட்சவின் நடவடிக்கைக்கு தன்னையே பலியாக்கியுள்ளார் சிறீசேன என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்!
கடந்த மாதம் திடீரென்று இலங்கை அதிபர் சிறீசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபட்ச, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். இது சிறீசேனவுக்கு பெரும் பின்னடைவு என்கிறார்கள்.
இலங்கையில் அரசியல் குழப்பம் உச்ச கட்டத்தை அடைந்தது. இதனால், தாம் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க, அதிபர் சிறீசேன, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வரும் ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது.
இலங்கை முன்னாள் அதிபரும், இந்நாள் அதிபர் சிறீசேனவால் பிரதமராக தற்போது அறிவிக்கப் பட்டவருமான மகிந்த ராஜபட்ச, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் முன்னர் தலைவராக இருந்தவர். தற்போது அக்கட்சியின் ஆலோசகர்களில் ஒருவராக இருந்து வந்தார். தற்போது, அதிபர் சிறிசேன அக்கட்சிக்கு தலைவராக உள்ளார்.
இந்நிலையில் மகிந்த ராஜபட்ச, சுதந்திர கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். அவருடன் சுதந்திர கட்சியில் அங்கம் வகித்த 50 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற ராஜபட்சவின் கருத்துக்கு சிறீசேன செவி சாய்க்காததால் 50 ஆண்டுகளாக இருந்த கட்சியில் இருந்து அவர் வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.
வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில் ராஜபட்ச போட்டியிடுவதற்கான முதல்படி இது என்கிறார்கள். ராஜபட்சவின் ஆதரவாளர்கள் மீண்டும் அரசியலில் கோலோச்சுவதற்காக, கடந்த ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சி தொடங்கப்பட்டது. ஜி.எல்.பெரிஸ் தொடங்கிய இந்தக் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் 340 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றது. இதை அடுத்தே இலங்கையில் அரசியல் மாற்றங்கள் மெள்ள மெள்ள ஏற்பட்டன. ராஜபட்ச இதில் இணைந்துள்ள நிலையில், பொதுஜன முன்னணியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள்.
தற்போது ராஜபட்ச எடுத்துள்ள முடிவு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேனவுக்கும் பெரும் பின்னடைவு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.




