இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழரின் மடல்…
“இலங்கை வாழ் இந்திய தமிழர்களின் உளவியலும் பூர்விக குடிகளான இலங்கை தமிழர்களது உளவியலும்.
இது எப்பொழுதோ எழுத நினைத்தது. இன்று அதற்கான களத்தை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சர்ச்சைக்குரிய பேட்டி அமைத்து கொடுத்து இருப்பதால் இந்த பதிவு இப்பொழுது பொருத்தமாயிருக்கும்.
முரளிதரன் பேட்டியின் சாராம்சத்தில் உள்ள சில பகுதிகள் இவை . ‘இலங்கை நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது. தமிழ் தலைவர்கள் உரிமை அது இதுவென்று பேசுகிறார்கள். மக்களின் தேவை அதுவல்ல’.
முரளிதரன் இலங்கை வாழ் இந்திய தமிழரென்று எல்லோருக்கும் தெரிந்ததே. இதுதான் இலங்கை வாழ் இந்திய தமிழர்களின் உளவியல் நிலை. இவர்களால் 4000 வருடங்களுக்கும் முன்பிருந்தே வாழ்ந்துவரும் பூர்விக குடிகளான இலங்கை தமிழர்களின் உளவியலை புரிந்துகொள்ளமுடியாது. காரணம் இந்திய தமிழர்கள் ஆங்கிலேயர்கள் இலங்கையில் பெருந்தோட்டத்துறையை அறிமுகப்படுத்தியபோது வேலைசெய்வதற்கென்று தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள். இது நடந்தது 1800 களில். இலங்கை சுதந்திரம் அடைந்தபோது இவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. அன்றிலிருந்து 1989 வரை இவர்களது குடியுரிமை status என்பது ‘ இருக்கிறது ஆனால் இல்லை ‘ என்ற குழப்ப நிலையிலேயே இருந்தது . ஆக இலங்கையின் குடியுரிமை இல்லாமலிருந்து குடியுரிமை கிடைத்ததே இவர்களின் பார்வையில் பெரிய வெற்றியாக இருந்தது. ( அதை வைத்தே இன்று வரை பிரஜாவுரிமையை நாங்கள்தான் வாங்கி கொடுத்தோம் என்று தேர்தல்களில் சொல்லி பாராளுமன்ற , மாகாணசபை தேர்தல்களில் வெற்றிபெறும் மலையக தமிழ் அரசியல்வாதிகளின் கதை தனிக்கதை).
இதோடு இந்திய தமிழர்களின் சமூக பின்னணியையும் கவனிக்க வேண்டும் . இவர்கள் அனைவருமே முன்னர் குறிப்பிட்டது போல 1800 களில் கூலி தொழிலாளியாக வந்தவர்கள். பின்னைய காலகட்டங்களில் பல இன்னல்களுக்கு பிறகு சிறிது சிறிதாக முன்னேறி கணிசமான சதவீதத்தினர் பெருந்தோட்டங்களிலிருந்து வெளியேறி இலங்கையின் மற்றைய பகுதிகளில் குடியேறி தொழில்ரீதியாகவும், கல்வியிலும் நல்ல முன்னேற்றங்களை அடைந்தனர். ஆனால் இன்றும் 60% இந்திய தமிழர்கள் பெருந்தோட்டங்களிற்கு உள்ளேதான் வாழ்கின்றனர்.
ஆக இந்த சமூக , அரசியல் பிண்ணனியோடு அவர்களின் இன்றைய நிலையை ஒப்பிடுகையில், அவர்களின் அடிப்படை உளவியல் என்பது ‘ இலங்கை அரசு இவ்வளவு எங்களுக்கு செய்வதே பெரிய காரியம்’ என்ற மனநிலை.
ஆனால் இலங்கை தமிழர்களின் உளவியல் என்பது இதற்கு நேர்ரெதிரான உளவியல். மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் விசயன் தன் நண்பர்களோடு இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்பிலிருந்தே இலங்கையில் வாழ்ந்துவருபவர்கள். இலங்கையின் பூர்விக குடிகள் தமிழர் என்பதற்கு தொல்லியல் சான்றுகள், பிராமி சின்னங்கள், இலக்கிய சான்றுகள் என பல பல்வேறு அறிஞர்களால் பலமுறை நிறுவப்பட்டிருக்கிறது. அதனால் அதை நான் இந்த பத்தியில் நிறுவவேண்டிய தேவையில்லை. ஆக கி.மு விலிருந்து இன்றுவரை இலங்கை தமிழர்கள் இலங்கையின் நிலப்பகுதிகளை ஆட்சியதிகாரம் செய்தவர்களாக இருக்கிறார்கள். இன்றுவரை அரச இயந்திரத்தின் அதிகாரவர்க்கத்தில் கணிசமான பங்கை தொடர்ந்து கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் பங்குதாரராகவே தங்களை பார்க்கிறார்கள். அதற்கான சமூக, அரசியல் வரலாற்று பின்னணி அவர்களுக்கு உண்டு. அது அவர்களின் உரிமை.அதை தட்டி கேட்டதுதான் கடந்த 30 வருட ஆயுதப்போராட்டம். அவர்கள் இந்திய தமிழர்கள் நினைப்பது போல ‘ இலங்கை அரசு இதை செய்வதே பெரிய விசயம்’ என்ற மனநிலைக்கு வரமுடியாது.
இதை இன்னும் எளிமையாக விளக்குகிறேன். நான் வாழும் UK இற்கு நான் better life இற்காக வந்த economic migrant. UK அரசு immigrants தொடர்பாக கொண்டுவரும் எந்த favorable சட்டங்களையும் ‘ பெரிய விசயம் ‘ என்றே வரவேற்பேன். இது என்னுடைய survival strategy. ஆனால் இந்த நாட்டின் பூர்விக குடிகளான Celtic மக்கள் தொடர்பான எந்த விடயத்திலும் என்னுடைய உளவியலில் இருந்து தீர்வு சொல்லமுடியாது . இது அவர்களின் மூதாதையர்கள் ஆண்ட நிலப்பகுதி. Germanic tribes களான Anglo, Saxon போன்ற tribes களிடம் இழந்த நிலப்பகுதி . இது அவர்களின் வலி. என்னால் உணரமுடியாது. இது அவர்களை பொறுத்தவரையில் rights .
இதுதான் இலங்கைவாழ் இந்திய தமிழருக்கு சொல்ல விரும்புவது. உங்களின் உளவியலில் இருந்துகொண்டு இலங்கை தமிழர்களின் உரிமைகளை புரிந்துகொள்ள முயலாதீர்கள். நீங்களும் இலங்கை தமிழர்களும் சட்டத்தின் முன் இலங்கை பிரஜைகள்தான். இருவருமே சம அந்தஸ்து உடையவர்கள்தான். மாற்று கருத்து இல்லை. அவர்களின் வலி என்பது ஒரு பூர்விக மக்கள் (indigenous ) தங்களின் பாரம்பரிய தாய் மண்ணில் (traditional land ) தாங்களே தங்களை ஆள்வதற்கான உரிமைகளை இழந்த வலி. அதை உங்களின் உளவியலில் இருந்து அணுகாதீர்கள்.
இதை இலங்கை வாழ் இந்திய தமிழனாகவே நான் சொல்கிறேன்.”
க. ஜெயகாந்த்




