ஆபரேஷன் மைத்ரி: நேபாளத்தில் மீட்புப் பணி தீவிரம்

உலகம்

காட்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் ஆபரேஷன் மைதிரி என்ற பெயரில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 12 விமானங்கள், 18 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட காத்மாண்டுவில் தொடங்கி வோக்காரா பள்ளத்தாக்கு வரையிலான பகுதியில் மீட்புப் பணிகளில் இவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமை வரை 30 வெளிநாட்டினர் உட்பட 5 ஆயிரத்து 400 பேர் நேபாளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். இதனை வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளும் நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிவித்த ஜெய்சங்க, இந்தியாவில் இருந்து பேரிடர் மீட்புப் பணிகளில் நன்கு பயிற்சி பெற்ற தலா 45 பேர் அடங்கிய 10 குழுக்கள் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். மேலும் 6 குழுக்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீட்பு பணிகளுக்காக இந்தியாவில் இருந்து அதிநவீனக் கருவிகள் விமானம் மூலம் நேபாளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடரும் நில அதிர்வுகள் காரணமாக மக்கள் பீதி அடைந்துள்ளனர். தாற்காலிக முகாம்கள் அமைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் 3 நாட்களாக திறந்த வெளி முகாம்களில் தங்கியுள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.