வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகானத்தில் ஒரு கட்டட வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், அங்கிருந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்களும் துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதாக மக்கள் நம்பினாலும், இதே அம்சம் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண விவகாரங்கள், கைகலப்பு, அடிதடி, தனிப்பட்ட நபர்களுக்கு வரும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட, பொதுமக்கள் கூடும் இடங்களில் துப்பாக்கியால் சுட்டு மக்களை கொல்லும் கொடூரங்களுக்கு காரணமாகியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பல நேரங்களில் பள்ளிகளில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடும்.
தற்போது விர்ஜினியா மாகாணத்தில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ளது விர்ஜினியா மாகாணத்தில் விர்ஜினியா பீச் மிகவும் பிரபலமானது.
இங்குள்ள ஒரு கட்டட வளாகத்திற்குள் திடீரென துப்பாக்கியோடு நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்! 4பேருக்கு வெள்ளிக்கிழமை இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
தகவலறிந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பொதுப் பணி செய்யும் அரசு ஊழியர் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விர்ஜீனியா மேயர் பாபி டையர், விர்ஜீனியா கடற்கரை வரலாற்றில் இது மிகவும் மோசமான நாள் என்று கூறியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட நபர் டிவாய்னி க்ரடோக் என்ற 40 வயதாகும் நபர் என்று தெரியவந்துள்ளது. அவர் விர்ஜீனியா பீச் பகுதியில் பப்ளிக் யுடிலிடி டிபார்மெண்டில் பணி புரிபவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர்.




