இந்தியாவுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்குறது கனடா: ஒப்பந்தம் கையெழுத்து

narendra-modi-canada-visit இந்தியாவுக்கு கனடா 3,000 டன் யுரேனியத்தை வழங்க ஒப்புக் கொண்டது. இதற்கான ஒப்பந்தம் அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் கையெழுத்தானது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக கனடா நாட்டுக்கு புதன் கிழமை சென்றார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடா நாட்டுக்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். கனடா சென்றடைந்த மோடிக்கு, கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரை மோடி சந்தித்துப் பேசினார். வெகு நேரம் நடைபெற்ற அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இந்தியாவுக்கு கனடா யுரேனியம் வழங்குவதற்கான சுமார் ரூ.1,600 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது. இதுகுறித்து கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்த மோடி, செய்தியாளர்டம் பேசியபோது, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம். இதன்படி, கனடாவின் கேமகோ அணு உற்பத்தி நிறுவனம் மூலம் இந்தியாவுக்கு ஐந்தாண்டுகளுக்கு 3,000 டன் யுரேனியம் வழங்கப்படும். ரஷியா, கஜகஸ்தான் நாடுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கும் மூன்றாவது நாடு கனடா. இதன் மூலம் இந்தியாவின் மின்சார, எரிசக்தித் தேவைகள் நிறைவு செய்யப்படும். மேலும், இந்தியா – கனடா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல் திட்டம் விரைவில் தயாரிக்கப்படும். கனடா இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது, இந்தியா மீது அந்நாடு வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றார். இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான பொருட்களை விற்பனை செய்வதை 1976ல் கனடா தடைசெய்தது. அப்போது, கனடா நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா அணுகுண்டு தயாரித்தது. இதையடுத்து, கனடா இந்தத் தடையை விதித்தது. இந்நிலையில், நீண்ட கால தடையை விலக்கிக் கொண்டு, கனடா இப்போது இந்த முடிவினை எடுத்துள்ளது. இதற்கான யுரேனியம் கேமிகோவிலிருக்கும் வடக்கு சாஸ்கெட்சவான் சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படும். உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய யுரேனியச் சுரங்கம் இதுதான். 2012ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. இதன்படி, கனடா நாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால், இந்தியா யுரேனியத்தை எப்படிப் பயன்படுத்துகிறது என்பதை யார் கண்காணிப்பது என முடிவுசெய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போனது. வரும் 2032ஆம் ஆண்டில் 63,000 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தி மூலம் உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்தியாவில் 22 அணுமின் நிலையங்கள் உள்ளன. அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் 40 அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியாதிட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.