கூடுதல் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு! அமைச்சர் விஜயபாஸ்கர்!

Published:

bus - 2026

தீபாவளி சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியாக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங் களில் 30 சிறப்பு கவுன்ட்டர்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஏற்கெனவே, திட்டமிட்டபடி, கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, அடுத்த 3 நாட்களுக்கு 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என 3 நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும்.

bus 1 - 2026

பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 300 கி.மீ .தூரத்துக்கும் மேல் பயணம் செய்யவுள்ள பயணிகள் அரசு போக்குவரத்துக் கழக இணையதளங்களான (www.tnstc.in) மட்டுமல்லாமல், www.redbus.in. www.busindia.com, www.paytm.com ஆகியவற்றின் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய ஏதுவாக சென்னையில் கோயம்பேடு – 26, தாம்பரம் சானடோரியம் – 2, பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா 1 என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு செயலாளர் பி.சந்திர மோகன், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கு.இளங்கோவன், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முத்துகிருஷ்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 286 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.6.81 கோடி வசூலாகியுள்ளது. டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு என தனித் தனியாக சிறப்பு செயலறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014450, 9445014436 என்ற தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும் வெளியூரில் இருந்து சென்னைக்கும் போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் மொத்தம் 8 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இதற்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 7.20 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறப்பு பேருந்துகளை 6 இடங்களில் பிரித்து இயக்கி வருகிறோம். இதனால் மக்கள் சிரமம் இன்றி பயணம் செய்து வருகின்றனர். நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இருசக்கர வாகனங்களில் காவலர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை – திருச்சி இடையே நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பேருந்துகளுக்கு என தனிப்பாதை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 18004256151 என்ற எண்ணுக்கு பயணிகள் புகார்அளிக்கலாம். அந்தப் புகார் குறித்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் மக்கள் திரும்பும் வகையில் 22,164 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img